Published : 17 Sep 2020 06:15 PM
Last Updated : 17 Sep 2020 06:15 PM

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்த தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வை நடத்துக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்த தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வை நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (செப். 17) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசின் ஒப்புதல் பெற்று பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் விதத்தில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக முதல்வருடைய அறிவிப்பு நேற்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

மாநில குற்றப் பதிவு ஆணையத்தின் 2019-க்கான புள்ளிவிவரங்கள், சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கெனவே 2020 ஜனவரி முதல் ஜூலை வரையில் நடந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதல்வருக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்:

1) சட்டப்பேரவைக் கூட்டத்தின் ஒரு சிறப்பு அமர்வை நடத்தி பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விவாதத்தை நடத்திட வேண்டும்.

2) அனைத்து அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட கூட்டத்தை நடத்தி, முதல்வர், உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

3) பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும், அச்சுறுத்தும் வலைதளப் பதிவுகளை நீக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாகுபாடு இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்றவாறு சைபர் குற்றப்பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

4) குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதம் குறைவாகவே நீடிப்பதற்கான முக்கியக் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, காவல்துறையின் விசாரணை முறை மற்றும் அணுகுமுறையில் ஆணாதிக்கப் பார்வை உள்ளிட்ட குறைபாடுகள், நீதிமன்றத்தில் ஏற்படும் நீண்ட காலதாமதம் உள்ளிட்ட சிக்கல்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

5) மதுபானக் கடைகளைப் படிப்படியாக மூடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) இக்குற்றங்களுக்குத் தீர்வு காணும் அதிகாரம் பெற்ற அனைத்துத் துறையினருக்கும் பாலின நிகர்நிலைப் பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட வேண்டும்.

7) குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமூக செய்திகள் அடங்கிய ஊடக விளம்பரங்களை, தமிழக அரசு ஊடக நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து வெளியிட வேண்டும். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவம் இடம்பெற வேண்டும்.

8) சட்ட அந்தஸ்து பெற்ற மகளிர் ஆணையம், குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மகளிர் காவல் நிலையங்களை மேம்படுத்துவது, வரதட்சணை தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைத் திருமண தடுப்புப் பிரிவு போன்ற அரசுத் துறைகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீதி பரிபாலன முறைமையை (Justice delivery system) மேம்படுத்தாமல், அதன் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தவறிழைக்கும் அல்லது முறையாக விசாரிக்க மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களது பதில் சொல்லும் பொறுப்பை (Accountability) உறுதிப்படுத்தாமல் தண்டனைகளை மட்டும் அதிகப்படுத்திக் கொண்டே போவது பலன் தராது எனக் கருதுகிறோம்.

முறையான விசாரணை, சாட்சிகள் பாதுகாப்பு, கால வரையறையோடு கூடிய தீர்ப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x