Published : 17 Sep 2020 05:01 PM
Last Updated : 17 Sep 2020 05:01 PM
தமிழகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சிவா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கரோனா பரிசோதனை முடிவுகள் விரைவில் வழங்கப்படுவதில்லை. கரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
இந்த தாமதத்தால் மாரடைப்பு, இதயக் கோளாறுகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் தயங்குகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனது மனைவிக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வர 8 நாட்களானதால் அவர் பாதிக்கப்பட்டார்.
எனவே, கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் கரோனா பரிசோதனை முடிவுகளையாவது விரைவில் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, விசரித்து இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கலாகி நிலுவையில் இருக்கும் மனுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT