Published : 22 Sep 2015 01:16 PM
Last Updated : 22 Sep 2015 01:16 PM
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான இடஒதுக்கீடுகள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது.
புதுச்சேரி அரசுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவுப்படியும் அரசுக்கு தனியார் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் பெறப்படும் இடங்களை சென்டாக் மூலம் நிரப்பப்பட வேண்டும். சென்டாக் மூலம் நிரப்பப்படும் மருத்துவப் படிப்புகளின் பட்டியலை மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகளின் பெயருடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
சென்டாக் மாணவர்களுக்கு சென்டாக் கமிட்டி அறிவிக்கும் கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை புதுச்சேரி அரசின் முழு கட்டுப்பாட்டிலும், சென்டாக் முழு கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்து சென்டாக் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்டாக் மோசடியில் ஈடுபடும் அரசைக் கண்டித்தும், நன்கொடை வசூலிக்கும் தனியார் கல்லூரிகளைக் கண்டித்தும் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் மற்றும் சென்டாக் மாணவர்கள் பாதுகாப்பு குழு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பந்த் போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் நேரு வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. படம்: எம்.சாம்ராஜ்
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் பந்த் போராட்டத்தையொட்டி இன்று புதுச்சேரி நகரை சுற்றியுள்ள நேருவீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, மறைமலைஅடிகள் சாலை, காமராஜர் சாலை, குபேர் பஜார் ஆகிய பகுதியில் உள்ள கடைகள் வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
டெம்போக்கள் ஓடாததால் சாலைகள் மற்றும் புதிய பேருந்து நிலையம், கடற்கரை சாலை போன்ற மக்கள் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராமப்புறங்களிலும் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஒரு சில பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி மாணவர்கள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.
வெகு தொலைவில் இருந்து வந்த தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளிலேயே திருப்பிவிடப்பட்டன. புதுச்சேரி நகரப்பகுதியில் ஒரு சில பிஆர்டிசி பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனிடையே காலை புதிய பேருந்து நிலையம் எதிரில், இந்திராகாந்தி சிலை சந்திப்பு, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரி ஆகிய இடங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் தலைவர் நாராயணசாமி தலைமையில் பொருளாளர் நாகராஜன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். பந்த் போராட்டத்தால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT