Published : 17 Sep 2020 11:23 AM
Last Updated : 17 Sep 2020 11:23 AM
கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தஞ்சாவூர் பூச்சந்தை 174 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பூ வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிர மணியர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பூச்சந்தை, மீன்சந்தை, காய்கறி சந்தை ஆகியவை இயங்கி வருகின்றன. இங்குள்ள பூச்சந்தையில் 20 பெரிய வியாபாரி களும், 30-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும், 50-க்கும் மேற் பட்ட பூ கட்டுவோரும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த பூச்சந்தைக்கு திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் 1,000 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். உள்ளூர் பொதுமக்களுக்கு சில்லறை வியாபாரத்துக்கும், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மொத்த வியாபாரத்துக்கும் இங்கிருந்து பூக்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன.
இந்நிலையில், கரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி பூச்சந்தை மூடப்பட்டது. பின்னர், கல்லுகுளம் தனியார் பள்ளி மைதானத்திலும், அதன்பிறகு அண்ணாநகர் மாநகராட்சி பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக பூச்சந்தை இயங்கி வந்தது.
இதற்கிடையே, தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பூ வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீண்டும் பூச்சந்தையை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சந்தையை ஆய்வு செய்து, மீண்டும் திறக்க அனுமதி வழங்கினர்.
இதையடுத்து, நேற்று காலை முதல் மீண்டும் பூச்சந்தை வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். 174 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள பூச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையைப் பின்பற்றும் விதமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT