Published : 15 Sep 2015 04:10 PM
Last Updated : 15 Sep 2015 04:10 PM
நீலகிரியில் உள்ள கிராம ஊராட்சிகளில் மின்சார மேம்பாட்டுக்காக, 35 ஊராட்சிகளில் ரூ.5 கோடி மதிப்பில் 90 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) நிறுவப்பட்டு வருவதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கப்பச்சி கிராமத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி மற்றும் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறு நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
விழாவுக்கு, தும்மனட்டி ஊராட்சித் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். உதகை சூப்பர் மார்க்கெட் தலைவர் வினோத், ஊர் தலைவர் தொரை, மின்வாரிய செயற்பொறியாளர் சிவராஜ், உதவி செயற்பொறியாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை மின்மாற்றி சேவையை தொடங்கி வைத்தார்.
அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கப்பச்சி கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள சுமார் 300 வீடுகளுக்கான மின் அழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் உள்ள கிராம ஊராட்சிகளில் மின் வசதி இல்லாத பகுதிகளில் மின் ‘சேவையை மேம்படுத்த தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி யோஜ்னா’ திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் 90 மின்மாற்றிகள் நிறுவும் பணி நடந்து வருகிறது.
இந்த மின்மாற்றிகள் 25 முதல் 40 கே.வி. திறன் கொண்டவை.மின்சாரம் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மின் இழப்பைத் தடுக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் 350 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் நகரங்களில் 100 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கட்டபெட்டு துணை நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை உள்ளது. இதை சரி செய்யும் வகையில் கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட மண்பெட்டு பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நில மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை முடித்தவுடன் 110 கே.வி. துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
கூடலூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு வனத்துறையினர் அனுமதி கிடைக்க வேண்டும்.
மின்மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுவதால் மின் இழப்பு குறையும். மின்சாரம் துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT