Published : 09 Sep 2015 09:57 AM
Last Updated : 09 Sep 2015 09:57 AM
தங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக, வளைகாப்பில் அணிவித்த வளையல்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரங்களுக்கு போட்டு வேண்டிக் கொள்கிறார்கள் செல்லம்பட்டி மக்கள்.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதற்கு பல்வேறு நம்பிக்கைகள் சொல்லப் படுகின்றன. கர்ப்பவதிகளுக்கு கைகள் மற்றும் கால்களில் நீர் சுரந்து வீங்கிக் கொள்ளும். ரத்த ஓட்டத்தைத் சீராக தூண்டிவிட்டால் இப்படி நீர் சுரப்பது வெகுவாக குறையும். கைகளில் நிறைய வளையல்கள் அணியும் போது, அவை கைகளில் உள்ள நரம்புகளை அடிக்கடி உராய்ந்து ரத்த ஓட்டத்தைத் தூண்டும். இதன் மூலம் நீர்சுரப்பு மட்டுப்படுத்தப்படும்.
இன்னொன்று, கர்ப்பம் தரித்து 8 மாதங்கள் ஆகிவிட்டால் கர்ப்பவதிகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற் காகவும் அவர்களுக்கு அதிகமாக வளையல் அணிவிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர, எங்கள் வீட்டு வாரிசை இந்தப் பெண் தனது வயிற்றில் சுமக்கிறாள் என்பதை சுற்றத்துக்கு சொல்வதற்காகவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
கிராமங்களில் இருப்பவர்கள் இந்த தாத்பரியங்களை எல்லாம் அறிந்திருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது. ஆனாலும் அவர்கள் தங்கள் வீட்டு பெண் நல்லபடியாக குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று நம்பிக்கை வைத்து வளைகாப்பு நடத்துகிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது செல்லம்பட்டி கிராமம். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் கை நிறைய வளையல்களோடு தான் வருகிறார்கள். இங்கு அனுமதிக்கப்பட்டதும் அந்தப் பெண்களின் கைகளில் கிடக்கும் வளையல்களை பத்திரமாக கழற்றும் உறவினர்கள், சுகாதார நிலையத்தின் உள்பகுதியில் இருக்கும் மரங்களில் அவற்றை மாட்டிவிடுகின்றனர்.
மக்களின் நம்பிக்கை
இதுகுறித்து அங்குள்ள செவிலியர்களிடம் விசாரித்தபோது, “வளையல்கள் சேதாரமானால் பிறக்கும் குழந்தைக்கு ஆகாது என்று நினைக்கும் இந்தப்பகுதி மக்கள், இங்குள்ள மரங்களில் வளையல்களை மாட்டி விட்டால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று நம்புகிறார்கள். வளையல்களை இங்கே மாட்டக் கூடாது என்று நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்பதாய் இல்லை.
அவர்கள் நம்பிக்கையை கெடுக்க வேண்டாம் என்பதால் நாங்கள் இப்போது எதுவும் சொல்வதில்லை. மாதத்துக்கு அதிகபட்சம் 25 குழந்தைகள் வரை இங்கே பிறக்கின்றன. மரங்களில் மாட்டப்படும் வளையல்களை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுவோம்” என்று கூறினார்கள்.
செல்லம்பட்டி மக்களின் நம்பிக்கை குறித்து பேசிய செக்கானூரணியில் செயல்படும் கிராம பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் பசும்பொன், “வளையல் சத்தம் கேட்டால் வயிற்றில் உள்ள குழந்தை துடித்துப் புரளும். அப்படி அடிக்கடி புரண்டால் குழந்தை சிக்கலில்லாமல் பிறக்கும். இதுதான் கிராமத்து நம்பிக்கை.
வளையல்களை உடைப்பதில்லை
பொதுவாக, வளைகாப்புக்குப் போட்ட வளையல்களை வெளியில் போடவோ உடைக்கவோ மாட்டார்கள். செல்லம்பட்டி பகுதியில் உள்ள யாரோ ஒருவருக்கு பிரசவம் ஆனபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் வளையல்களை போட்டிருக்கிறார்கள். அது சுகப் பிரசவமாகிப் போனதால் அதுவே பெரிய பிரச்சாரமாகி இருக்க வேண்டும். அந்தப் பிரச்சாரம்தான், சுகப் பிரசவத்துக்காக மரத்துக்கு வளையல் போட்டு வணங்கும் வழக்கமாக மாறி இருக்கிறது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT