Published : 16 Sep 2020 08:55 PM
Last Updated : 16 Sep 2020 08:55 PM
இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பாக அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் துறைரீதியான விசாரணையில், குலவழக்கப்படி செய்யப்படும் விவாகரத்தையும் விசாரணை அதிகாரி பரிசீலிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தலைமை காவலர் சுடலைமணி. இவர் முத்துலட்சுமி என்பவரை 1996-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ஜீவரத்தினம் என்ற பெண் சார்பு ஆய்வாளரை சுடலைமணி 2007-ல் 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காதது தொடர்பாக சுடலைமணிக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு தலைமைக் காவலர் பதவியிலிருந்து முதல் நிலை காவலராக சுடலைமணி பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் குலவழக்கப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பாக அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக விசாரணை மேற்கொள்ளும் போது, குலவழக்கப்படி பெற்ற விவாகரத்து பெற்றதையும் பரிசீலிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், குலவழக்கப்படி விவாகரத்து பெற்றதற்கான ஆதாரங்கள், சான்றாவணங்களை விசாரணை அதிகாரி முன்பு சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கப்படும் ஆவணங்களை விசாரணை அதிகாரி பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரரின் முதல் மனைவி மனைவியே விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி, தன் கணவரை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குலவழக்கப்படி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறவில்லை என மனுதாரர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT