Published : 16 Sep 2020 07:26 PM
Last Updated : 16 Sep 2020 07:26 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 155 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி 25 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய நிலம், கண்மாயை கிராம மக்கள் மீட்டனர்.
காரைக்குடி அருகே கே.வேலங்குடி ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் பலர் விவசாயத்தை கைவிட்டனர்.
விவசாய நிலங்கள், பாசனக் கால்வாய், கண்மாய், வரத்துக்கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்தன. இதனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் விவசாயமே நடக்காமல் இருந்தது.
இந்நிலையில் கிராமமக்கள் ஒன்றாக இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயம் மேற்கொள்ளை முடிவு செய்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான ஜேசிபி இயந்திரங்களை ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியரும் 6 ஜேசிபி இயந்திரங்களை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து 155 ஏக்கர் விவசாயி நிலங்கள், 100 ஏக்கரில் கண்மாய், வரத்துக்கால்வாய், பாசனக் கால்வாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 300 குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்தனர். தொடர் வறட்சியால் அவர்கள் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத்தொழிலுக்கு மாறினர். இந்நிலையில் எங்கள் ஊர் இளைஞர்கள் விவசாய நிலத்தை மீட்க வேண்டுமென கேட்டு கொண்டனர்.
இதையடுத்து நாங்கள் ஊர் கூட்டம் கூட்டி விவசாய நிலத்தை மீட்க முடிவு செய்தோம். விவசாய நிலங்கள், பாசனக் கால்வாய், கண்மாய், வரத்துக் கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்திருந்ததால் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் ஜேசிபி இயந்திரங்களை அனுப்பி வைத்து உதவியதால் 5 மாதங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுவதையும் அகற்ற முடிந்தது.
சமீபத்தில் பெய்த மழையில் கண்மாய் பாதியளவு நிரம்பியுள்ளது.
இதனால் விவசாய பணிகளை தொடங்கிவிட்டோம். 25 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது, என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT