Published : 16 Sep 2020 04:56 PM
Last Updated : 16 Sep 2020 04:56 PM
தமிழகம் முழுவதும் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கரோனாவால் அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல பெறறோர் அச்சப்படுகின்றனர்.
ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் குடற்புழு நீக்க முகாம் நடத்தப்பட்டு ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் குடற்புழு நீக்க முகாம் செப்.14-ம் தேதி தொடங்கி செப்.28-ம் தேதி வரை நடக்கிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நகர நல மையங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4.04 லட்சம் குழந்தைகள், சிறார்களுக்கு மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பெற்றோர் தங்களது குழந்தைகளை சுகாதார நிலையங்களுக்கு அழைத்து செல்ல அச்சப்படுகின்றனர்.
உலர் உணவுப்பொருட்களை அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர். அதேபோன்று குடற்புழு நீக்க மாத்திரைகளையும் வழங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT