Last Updated : 16 Sep, 2020 04:16 PM

1  

Published : 16 Sep 2020 04:16 PM
Last Updated : 16 Sep 2020 04:16 PM

குளத்தில் குதித்து தற்கொலை செய்த தாய், மகளின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்: உறவினர்கள் கைவிட்ட நிலையில் நெகிழச்செய்த காவல்துறையின் மனிதாபிமானம்

நாகர்கோவில்

நாகர்கோவிலில் முதியவர் இறந்ததால் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய், மகளின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் இருவரையும் ஒரே இடத்தில் போலீஸாரே அடக்கம் செய்தனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்த வடிவேல்முருகன் (80) என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 14-ம் தேதி இரவு இறந்த நிலையில், வறுமையில் வாடிய அவரது மனைவி பங்கஜம், மகள்கள் மாலா, சச்சு ஆகியோர் ஆகியோர் வாழ்வாதாரமும், ஆதரவுமின்றி சிரமப்படுவதை விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

பின்னர் வடிவேல் முருகனின் உடலை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பகுதிக்கு இரவோடு இரவாக நடந்தே சென்றுள்ளனர்.

அங்குள்ள நல்லூர் இளையநயினார் குளத்தில் தாய், மகள்கள் 3 பேரும் கைகளை ஒருவொருக்கொருவர் இணைத்து கட்டியவாறு குளத்திற்குள் குதித்துள்ளனர்.

இதில் பங்கஜம், மாலா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். சச்சு உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். சுசீந்திரம் போலீஸார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து சச்சுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இறந்துபோன பெற்றோர், சகோதரியை நினைத்து அழுதவாறே உள்ளார். தன்னை ஏன்? காப்பாற்றினீர்கள் என புலம்பியவாறு இருப்பது மருத்துவமனையில் சக நோயாளிகள், மருத்துவர்களை கண்கலங்க செய்துள்ளது.

இந்நிலையில் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பங்கஜம், அவரது மகள் மாலா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து ஆசாரிபளளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

காலையில் இருந்து வெகுநேரமாக உறவினர்கள் யாரும் அவர்கள் இருவரின் உடலை பெற்றுக்கொள்ள முன்வராததால் போலீஸாரே அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி தாய், மகள் இருவரையும் தனித்தனி சவபெட்டியில் வைத்து சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள அரசு நிலத்தில் குழிதோணடி இருவரது உடலையும் ஒரே இடத்தில் போலீஸாரே அடக்கம் செய்தனர்.

இதைப்போலவே இறந்த முதியவர் வடிவேல் முருகனின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யபப்பட்டது.

அவரது உடலையும் உறவினர்கள் வாங்க வராததால் போலீஸாரே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். போலீஸாரின் இந்த மனிதாபிமான செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழ செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x