Last Updated : 16 Sep, 2020 02:46 PM

2  

Published : 16 Sep 2020 02:46 PM
Last Updated : 16 Sep 2020 02:46 PM

நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி தொடக்கம்

ஆராய்ச்சிக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.

திருப்பத்தூர்

நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனா நோயை கட்டுப்படுத்துவற்கான சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகள் இன்று தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சித்த முறைப்படி சிகிச்சை அளிக்க சிறப்பு சித்த மருத்துவ மையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு 52 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகள் 257 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் முதல் பரிசோதனையிலேயே 251 நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (CTRI) ஒப்புதலோடு நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளின் ஆய்வை முறையாக தொடங்க அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி, நாட்றாம்பள்ளி சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் 20 பேருக்கு சித்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்பும், அதன்பிறகு சித்த மருந்துகள் சாப்பிட்ட பிறகும் அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இன்று (செப். 16) காலை முறைப்படி ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

கரோனா நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆராய்ச்சிகள் அனைத்து மத்திய அரசின் ஆராய்ச்சி நிலையம் மூலமாக நேரடியாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சித்த மருத்துவ மருந்துகள் மனதளவிலும், உடலளவிலும் எவ்வாறு பயன் உள்ளதாக இருக்கும் என்பது தெரியவரும் என சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைமை சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கலந்து கொண்டு பேசுகையில், "நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய முறைப்படி உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி நாள்தோறும் காலையில் 8 வடிவிலான நடைமேடையில் நடைபயிற்சி, யோகா, தியானபயிற்சி, மூச்சுப்பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சிகள் முறைப்படி அளிக்கப்படுகின்றன.

மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மூலிகை சூப், உடலுக்கு வலுசேர்க்கும் உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சித்த மருத்துவர்கள் தயார் செய்து நோயாளிகளுக்கு வழங்குவதால் கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். சித்த மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்போது மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அனுமதியுடன் கரோனாவுக்கான மருத்துவ ஆராய்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரியது" என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவர் அருள், வேலூர் புற்று மகரிஷி சித்த மருத்துவமனை மருத்துவர் பாஸ்கர் மற்றும் மருத்துவ மையத்தின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x