Published : 16 Sep 2020 02:40 PM
Last Updated : 16 Sep 2020 02:40 PM
சிறுகதைகள் வாய்மொழிக் கதைகளாகவே இனி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் 'கி.ரா. நூற்றாண்டை நோக்கி' என பிறந்தநாள் விழாவுக்கு இன்று (செப். 16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 98 வயது நிறைவு செய்து 99 வயதில் அடியெடுத்து வைத்துள்ள கி.ரா.வின் பிறந்தநாள் விழாவில் அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூல் வெளியீடு நடைபெற்றது. கி.ரா. விருது பெற தேர்வான எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு ரூ.1 லட்சம் மாலை நடைபெறும் நிகழ்வில் தரப்பட உள்ளது.
கரோனா காலத்தில் தனிமனித இடைவெளியுடன் விழா நடைபெற்றது. இணையத்திலும் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விழாவுக்கு வந்து நேரடியாக வாழ்த்து தெரிவித்தார். எம்.பி.க்கள் கனிமொழி, ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் சிவக்குமார் மற்றும் தமிழ் அறிஞர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான தமிழ் அறிஞர்கள், வாசகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.
பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வாசகர்களிடம் பேசியதாவது:
"இசையை கற்க விரும்பினால் தொடர்ந்து கேட்க வேண்டும். அதனால் இசை ஞானம் தன்னால் வரும். திரைப்பாடல்களை தொடர்ந்து கேட்டு தன்னாலே இயல்பாக பாடுவோர் இங்கு பலருண்டு. பல இசைக்கலைஞர்கள் அதுபோல் உருவானவர்கள்தான். எங்கிருந்து யார் வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
சிறுகதை வடிவங்கள் தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகளாகவே இனி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறுகதைக்கு ஒரு வடிவம் உருவாகியிருந்தாலும், அதுவும் உடையும். 'கோபல்ல கிராமம்' வெளியான போது அது நாவல் வடிவம் இல்லை என்றார்கள். தற்போது முதல்தரமான நாவல் என்கிறார்கள். இக்கருத்தும் மாறலாம்" என்று தெரிவித்தார்.
உற்சாகமாக இசை, இசைக்கலைஞர்கள், இலக்கியம் என பல தரப்பட்ட விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துரையாடி பின்னர் நூல்களில் கையெழுத்திட்டும் தந்தார். வாசகர்கள் பிறந்தநாளையொட்டி கேக் வாங்கி வந்தனர். "எனக்கு கேக் வெட்டி பழக்கமில்லை" என்று மறுத்தார். அனைவரும் வற்புறுத்த கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளிக்க கூறினார்.
விருது பெறும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பேசுகையில், "மக்களிடம் இருக்கும் சொற்களை தேடி, தேடி தொகுப்பதே வட்டார வழக்கு. வட்டார வழக்கு படைப்பாளிக்குதான் மண்ணுடன் கூடுதல் சொந்தமுண்டு. மண்ணுக்கு முதல் உரிமையே வட்டார வழக்கு எழுத்தாளனுக்குதான்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT