Published : 16 Sep 2020 01:59 PM
Last Updated : 16 Sep 2020 01:59 PM
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியில் புதிதாக மினி உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இன்று (செப். 16) தொடங்கி வைத்தார்.
இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருமலைராயன்பட்டினத்தில் நடைபெற்ற இதற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"புதுச்சேரி முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறையின் முயற்சியால் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், இங்கு மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.1.25 கோடி ஒதுக்கீடு கிடைத்தது.
காரைக்காலில் ஏற்கெனவே ஒரு உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. இது தவிர, இப்பகுதியானது மாவட்டத்தின் பெரிய பகுதியாகும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய வலிமையான மனித வளத்தின் மூலமே இருக்க முடியும். அதை ஊக்கப்படுத்தும் வகையில், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த அரங்கம் நல்ல பயனைத் தரும். இந்த அரங்கம் 6 மாத காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும். இப்பகுதி இளைஞர்கள் எந்த விளையாட்டுகளை விரும்புகிறார்களோ அதற்கேற்ற வகையில் இந்த அரங்கில் 3 அல்லது 4 விளையாட்டுகள் விளையாடும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயிலும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், புதுச்சேரிக்கு சென்று பருவத் தேர்வை எழுத முடியாத சூழலைக் கருத்தில்கொண்டு, காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பிராந்திய வளாகத்தில் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையம் அமைக்க அரசு செயலாளர், கல்வித்துறை இயக்குநரிடம் பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹரிகா பட், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT