Published : 16 Sep 2020 11:03 AM
Last Updated : 16 Sep 2020 11:03 AM

வங்கியிலிருந்து பணம் எடுத்துத்தர லஞ்சம் பெற்ற விஏஓ சிறைபிடிப்பு

பிச்சனூர் கிராம நிர்வாக அலுவலர் திருஞானத்திடம் நேற்று விசாரணை நடத்தும் போலீஸார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமுதம்(65). இவரது கணவர் உயிரிழந்ததையடுத்து, தமிழக அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு வங்கிக் கணக்கு எண் 7 இலக்கங்களில் இருந்து 16 இலக்கங்களாக மாறியதிலிருந்து வங்கியிலிருந்து பணம் எடுக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பணம் தேவைப்பட்டதால் தன் தங்கை மகன் மூர்த்தியுடன் சென்று கிராம நிர்வாக அலுவலர் திருஞானத்தை(48) சந்தித்து, வங்கியிலிருந்து பணம் எடுத்துத்தருமாறு கேட்டார். அதற்காக தனக்கு ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று திருஞானம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வங்கிக்குச் சென்று குமுதத்தின் கணக்கி லிருந்த ரூ.94 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரத்தை திருஞானம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்காக ரூ.15 ஆயிரத்தை திருஞானத்திடம் கொடுத்த குமுதம், ஊருக்குச் சென்று இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, வங்கியிலிருந்து பணத்தை எடுத்துத் தருவதற்கு ஏன் பணம் தரவேண்டும் எனக்கூறி, கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து சிறைபிடித்து குமுதத்தின் உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் கலைவாணன் ஆகியோரிடம், கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குமுதத்திடம் வாங்கிய பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செந்துறை அருகே பணியாற்றியபோது, அரசு சலுகைகளை பெற்றுத் தருகிறேன் என்று கூறி கணவரை இழந்த பெண் ஒருவரிடம் திருஞானம் பேசிய செல்போன் பதிவு வைரலானதையடுத்து, 6 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x