Published : 15 Sep 2020 08:50 PM
Last Updated : 15 Sep 2020 08:50 PM
ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை. அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த 'நீட்'டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் தயாராக இருக்கிறது அதிமுக அரசு என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்குப் பதிலளித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு எப்படித் தீர்வு காணப்பட்டதோ, அதேபோன்று நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்ட முன்வடிவை உருவாக்கலாம் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியது சாத்தியமில்லாதது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதில் ஒரு பகுதி:
''இன்றைக்கு 'நீட்' என்ற பாதிப்பு உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு வந்த காரணத்தினால், எந்த ஒரு ஏழை மாணவனுக்கும், கிராமப்புற மாணவனுக்கும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தானே, 150 மடங்காக ஒரே ஆண்டிலே இன்றைக்கு 65 ஆண்டுகளிலே பெற்ற வளர்ச்சியை பத்தே ஆண்டுகளில் பெற்றது அதிமுக அரசா, இல்லையா சொல்லுங்கள். இதில் எப்படி நாம் கொள்கையை விட்டுக் கொடுப்போம்? நீங்கள் சொல்லுங்கள்.
திராவிட வழியிலே வந்தவர்கள் நாம். எப்படி நம்முடைய உணர்வுகளை விட்டுக்கொடுப்போம்? எப்படி உரிமையை நாம் விட்டுக்கொடுப்போம்? ஆனால், இதில் இந்தக் காரண காரியங்களைப் பேசாமல், இதிலே அரசியல் செய்வது மட்டும்தான் வேதனையாக இருக்கிறது. இதில் அரசியல் செய்வதுதான் வேதனையாக இருக்கிறது. எல்லோரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவர்கள்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுகவோடு விவாதம் செய்தபோது இதே சட்டப்பேரவையில் சொன்னார். திமுக இந்த 'நீட்' பிரச்சினையில், 'தும்பை விட்டு நீங்கள் வாலைப் பிடிக்கிறீர்கள்' என்பதை அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். தும்பை விட்டது என்பது உண்மைதான். அது வரலாற்றிலே ஒரு கருப்பு நாள். 27-12-2010 என்பது வரலாற்றிலே ஒரு மிகப்பெரிய கருப்பு நாள்.
இந்தக் கருப்பு நாளை மறைப்பதற்காகத்தான் இன்றைக்கு காங்கிரஸார் வெளிநடப்பு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆக, எந்தக் காலத்திலும் அதிமுக 'நீட்' எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ஆனால், மாணவர்களைக் குழப்பக்கூடாது. நான் எதிர்க்கட்சித் தலைவரை அன்போடு கேட்கிறேன். நீங்கள் சொல்கிறீர்கள், 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்கிறீர்கள்.
அது எப்படிச் செய்ய முடியும்? அந்த வழியை நீங்கள் சொல்லுங்கள். அதை இப்பொழுதே செய்வதற்கு அதிமுக அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவர், மாணவர்களைக் குழப்பக்கூடாது. பெற்றோர்களைக் குழப்பக் கூடாது. மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி, அவர்களைத் திசை மாற்றிவிடக்கூடாது. அதிலேதான் நமக்குப் பிரச்சினை வரும். அந்த மனச்சோர்வு அதிலேதான் ஏற்படும்.
அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, இப்பொழுது என்ன நிகழ்வோ அந்த நிகழ்வு. ஆனால், தொடர்ந்து அரசியல் அழுத்தம், சட்டப் போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் மூல வழக்கு என்று எல்லா விஷயத்திலும் எல்லோரும் எல்லோருடைய மூல உணர்வோடு எல்லாம் சேர்த்துத்தான் போட்டோம். எல்லோரும் சேர்ந்து திமுக, அதிமுக எல்லோரும் சேர்ந்துதான் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
அதனுடைய நிலையும் உங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கு விதிகள் இல்லை. ஆனால், இப்போது நீங்கள் மாணவர்களிடம், நீங்கள் 8 மாதங்களில் 'நீட்' தேர்வு என்பது கிடையாது என்ற ஒரு வாக்குறுதியை நீங்கள் மாணவர்கள் மனதிலே சொன்னால், அந்த வழிவகை எப்படி என்பதை நீங்கள் சொன்னால், அதை இப்பொழுதே செய்வதற்கு அதிமுக அரசு தயாராக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு ஓராண்டுக்கு நம்முடைய அரசு சார்பிலே அப்போதைய நம் முதல்வர் சென்று, விலக்கு பெற்றது என்பது உண்மை. ஆனால், ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்திலே மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு. தமிழகத்திற்கு மட்டுமான நிகழ்வு. ஆந்திராவிலேயோ, கர்நாடகத்திலேயோ இல்லை. இது ஒரு மாநிலத்தினுடைய பிரச்சினை. தமிழகத்தில் மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருந்தது.
ஆனால், 'நீட்' பிரச்சினை என்பது இன்றைக்கு இந்தியாவிலே இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய, முதல்வராக இருக்கக்கூடிய மாநிலத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆளக்கூடிய, முதல்வராக இருக்கக்கூடிய மாநிலத்திலும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நீங்கள் கூட்டணியிலே சேர்ந்து சொல்லக்கூடிய மேற்கு வங்காளம், அந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இப்பொழுதும் சட்டப் போராட்டம் நடத்தி, இப்பொழுதும் அரசியல் அழுத்தம் கொடுத்து, கடைசி விளிம்புவரை போராடிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே மாநிலம் இன்றைக்கு தமிழ்நாடு மட்டும்தான். அதனால், ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல இதற்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த 'நீட்'டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் தயாராக இருக்கிறது அதிமுக அரசு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்தக் கொள்கையிலே உறுதியாக இருந்தார். தற்போதைய முதல்வர் அந்தக் கொள்கையிலே இன்றைக்கும் உறுதியாக இருக்கிறார்; அரசு உறுதியாக இருக்கிறது. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. உணர்வோடு இருக்கிறோம்.
ஆனால், வரலாற்றுப் பிழை என்பதை நாம் மனதிலே வைத்துவிட்டு, அதை மனதிலே வைக்காமல், மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு அதை நாம் இப்பொழுது அரசியல் செய்வது மட்டும்தான் வேதனையாக இருக்கிறது என்பதை நான் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன்''.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT