Published : 15 Sep 2020 06:38 PM
Last Updated : 15 Sep 2020 06:38 PM
நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி அறிவிக்கும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுதீஷ் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
பின்னர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தேமுதிக ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்கும் என்பதால் அதனை ஆதரித்து வந்தோம்.
ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமுல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். எனவே தற்போது நீட் தேர்வு நடத்துவது சரியாக இருக்காது.
தேர்வு முறைகேடுகளைp பொருத்தவரை சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை கொண்டு வருவது நல்லது தான்.
தேமுதிகவின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அன்மை மொழி கற்போம் என்பது தான். தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும் என்றால் தமிழருக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
2021 சட்டபேரவை தேர்தலை பொருத்த வரை நடிகர் ரஜினிகாந்த் கட்சி முதலில் தொடங்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம். நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அந்த முடிவுகளை பொருத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT