Published : 15 Sep 2020 04:31 PM
Last Updated : 15 Sep 2020 04:31 PM
மத்திய மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக லேசான மழையும், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“ஆந்திரக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது.
இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
வால்பாறை PTO (கோவை ) 3 செ.மீ., சோத்துப்பாறை (தேனி), ஆத்தூர் (சேலம் ) தலா 2 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை), சோலையாறு (கோவை ), பந்தலூர் தாலுக்கா ஆபீஸ் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), தேவலா (நீலகிரி) ஓமலூர் (சேலம்), காஞ்சிபுரம் ISRO (காஞ்சிபுரம்), மாமல்லபுரம் (காஞ்சிபுரம்), திருக்கழுக்குன்றம் தாலுகா ஆபீஸ் (செங்கல்பட்டு), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), திருவள்ளூர் (திருவள்ளூர் ), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 15-ம் தேதி அன்று மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப். 16 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT