Last Updated : 15 Sep, 2020 03:57 PM

 

Published : 15 Sep 2020 03:57 PM
Last Updated : 15 Sep 2020 03:57 PM

நாகர்கோவிலில் வறுமையால் சோக முடிவு; கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய 80 வயது முதியவர் இறந்ததால் மனைவி, மகள் குளத்தில் குதித்து தற்கொலை; கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

நாகர்கோவில்

நாகர்கோவிலில் வறுமையால் தவித்த குடும்பத்தை கூலி வேலை செய்து காத்து வந்த 80 வயது முதியவர் இறந்ததால் மனைவியும், மகள்களும் கையில் கயிற்றை கட்டியவாறு குளத்தில் குதித்தனர். இதில் இருவர் இறந்த நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

நாகர்கோவில் அருகே சுசீந்திரம் செல்லும் வழியில் உள்ள நயினார் குளத்தில் இன்று காலை 3 பெண்கள் தண்ணீரில் மிதந்த நிலையில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அங்கு வந்து தண்ணீரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்தவர்களை மீட்டு கரைசேர்த்தனர். அப்போது இரு பெண்கள் இறந்து விட்டனர். ஒரு பெண் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவர்கள் யார் எனத் தெரியாத நிலையில் போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற இரு பெண்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது பெயர் சச்சு(40) என்று தெரிவித்த அவர் அளித்த வாக்குமூலத்தில், வறுமையால் குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்த அதிர்ச்சி தகவலை கூறினார்.

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன்(80). இவர் வயதான காலத்திலும் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்திலேயே குடும்பத்தனர் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவரது மனைவி பங்கஜம்(71), மகள்கள் மாலா(48), சச்சு. வறுமையால் இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வேலைகிடைக்காமல் குடும்பச் செலவிற்கு வருமானமின்றி வடிவேல் முருகன் தவித்து வந்துள்ளார்.

இதற்கிடையே கீழே விழுந்த அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குணமான பின்னர் வீட்டில் படுக்கையிலேயே இருந்த நிலையில் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

ரேஷனில் கிடைக்கும் அரிசி, மற்றும் பொருட்கள் மூலம் பசியை போக்கி வந்துள்ளனர். படுக்கையில் இருந்த வடிவேல் முருகன் நேற்று இரவு இறந்துள்ளார். இதனால் அவரது மனைவியும், மகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டின் வாழ்வாதாரம் பெற்றுத் தந்தவர் இறந்துவிட்ட நிலையில் அனாதையாக கஷ்டப்படுவதை நினைதது மனவேதனை அடைந்துள்ளனர்.

இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன், கட்டிலில் வடிவேல் முருகனை இறந்த நிலையில் வைத்து விட்டு வீட்டை பூட்டி வெளியே சென்றனர். பங்கஜம், அவரது மகள்கள் மாலா, சச்சு ஆகிய 3 பேரும் இரவு நடந்தே 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளனர்.

அவர்கள் சுசீந்திரம் அருகே நல்லூர் நயினார் குளப்பகுதியை அடைந்ததும் அங்கு 3 பேருமை கையை கயிற்றால் ஒருவொருக்கொருவர் இணைத்து கட்டிகொண்டு குளத்தில் குதித்துள்ளனர்.

இதில் பங்கஜமும், மாலாவும் உயிரிழந்துள்ளனர். சச்சு மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட தாய், மகள், உயிருக்கு போராடும் மகள் ஆகியோரின் உருவங்கள் மிகவும் மெலிந்த தேகத்துடன் வறுமை நிலையை காட்டின. வறுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x