Published : 15 Mar 2014 10:29 AM
Last Updated : 15 Mar 2014 10:29 AM
மார்ச் 16-ல் தருமபுரி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜய காந்தும் ராமதாஸும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு பாமக மற்றும் தேமுதிக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பாஜக அணியில் பாமகவும் தேமுதிகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதி பங்கீடு மற்றும் விரும்பும் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படாததால் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
எதிர்பார்த்த ஒப்பந்தம் ஏற்கப்படாவிட்டால் பாஜக கூட்டணியைவிட்டு பாமக வெளியேறக் கூடும் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், 16-ம் தேதி விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார்.
அதேநாளில் ராமதாஸும் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார். அதற்கு முன்பாக, பாஜக கூட்டணியில் தேமுதிக-வும் பாமக-வும் இடம்பெறுவது இறுதி செய்யப்பட்டால், ராமதாஸும் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தருமபுரி அரசியல் வட்டாரத்தினர் கூறுகையில், “பாமக-வும் தேமுதிக-வும் தமிழக அரசியலில் இதுநாள் வரை எதிரும் புதிருமாய் இருந்து வந்துள்ளன. இரு கட்சிகளுமே ஒன்றை ஒன்று விமர்சித்தும் கிண்டலடித்தும் வந்துள்ளன. குறிப்பாக பாமக தேமுதிக-வை அதிகப்படியாக சாடி வந்துள்ளது. ராமதாஸும், அன்புமணியும் மேடைகள்தோறும் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை வெளிப்படையாகவே பேசியுள் ளனர்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும்விதமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் பாமக-விடம் சவால்விட்டு அக்கட்சி செல்வாக்காக இருக்கும் கடலூர் மாவட்டத்தின் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஜயகாந்த். அப்போதே பாமக-வினர் பார்வையில் விஜயகாந்த் நிரந்தர அரசியல் எதிரியாகிவிட்டார்.
அதேபோல, கடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாமக-வுக்கு பலம் மிகுந்த விழுப்புரம் மாவட்டத்தின் ரிஷிவந்தியம் தொகுதியில் களமிறங்கி வென்றார்.
இதெல்லாம் இவ்விரு கட்சி களுக்கும் இடையில் தொடர்ந்து கசப்புணர்வு நீடிக்க காரணங்களாக அமைந்தன.
இந்நிலையில், காலத்தின் கட்டாயத்தால் பாமக-வும் தேமுதிக-வும் இப்போது ஒரே கூட்டணியில் இணையக்கூடிய சூழல் நிலவுகிறது. 16-ம் தேதிக்கு முன்பாக கூட்டணிக்கு இறுதிவடிவம் கிடைத்து விட்டால் ராமதாஸும் விஜயகாந்தும் முதல் முறையாக ஒரே மேடையில் அல்லது ஒரே வாகனத்தில் இணைந்து பிரச்சாரம் செய்வர். இது அரசியலில் ஒரு முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது’’ என்றனர்.
இதுகுறித்து பாமக-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணனிடம் கேட்டபோது, 16-ம் தேதி அவரச சூழல் எப்படி அமையும் என்று தெரியவில்லை. அதேநேரம், கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 16 -ம் தேதிக்குப் பிறகு நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT