Published : 15 Sep 2020 01:29 PM
Last Updated : 15 Sep 2020 01:29 PM
கரோனா காலப் பேரிடர் நியமனங்கள், கொள்முதல் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை, ஒட்டுமொத்தமாக கரோனாவைக் கையாளுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து நிற்கிறது. அரசு விரிவான வெள்ளையறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கரோனா பாதிப்புக் குறித்துப் பேசிய உரை வருமாறு:
''கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு 5 லட்சம் பேரைத் தாண்டி விட்டது. இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை முதலிடம். 30 ஆயிரத்திற்கு மேல் செங்கல்பட்டு - 20 ஆயிரத்திற்கு மேல் திருவள்ளூர், கோயம்புத்தூர் என்ற பாதிப்பு பதற வைக்கிறது.
10 முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12 ஆகவும், 5 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 9 ஆகவும் உள்ளன. இந்தப் பாதிப்பிற்கு இடையில்தான், ஊரடங்கைத் தளர்வு செய்திருக்கிறோம்.
தொழில், பொருளாதாரம், தனிநபர் வருமானம், தனிநபர் சுகாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பேரிடர் காலத்திற்கு - ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் பண உதவி அளிக்க வலியுறுத்தினேன். அதைக் கொடுக்கவில்லை.
மாவட்டங்களில் உள்ள- மருத்துவமனை, ஆய்வகங்கள் வாரியாக கரோனா சோதனை, படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும் என்றேன். அதையும் செய்யவில்லை.
கரோனா இறப்பு எண்ணிக்கை, சோதனை, நோய் பாதிப்பு, குணமாகி வீடு திரும்பியோர் என எதிலும், அரசு புள்ளிவிவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே என் குற்றச்சாட்டு. மறைக்கப்பட்ட மரணங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை என்னவானது என்று தெரியவில்லை.
கரோனாவிற்கு முந்தைய நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யவில்லை. பரிந்துரை அளிக்க அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் குழு அறிக்கை என்னவானது என்று தெரியவில்லை. அதுகுறித்த விளக்கத்தை நான் அறிய விரும்புகிறேன்.
கரோனா காலப் பேரிடர் நியமனங்கள், கொள்முதல் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கரோனா முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிகிச்சை நிதி 2 லட்சம் ரூபாய், உயிர்த் தியாகத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- அது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதா? அதுகுறித்தும் அறிந்திட நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஒட்டுமொத்தமாக கரோனாவைக் கையாளுவதில் இந்த அரசு படுதோல்வி அடைந்து நிற்கிறது என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பல முறை கோரிக்கை வைத்தேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் – அதில் ஆலோசிப்போம் என இதுகுறித்து நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். அதையும் அலட்சியப்படுத்திவிட்டீர்கள். இன்றைக்குக் கரோனா மேலாண்மையிலே தோற்று ஐந்து லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் - தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் படுமோசமாகும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் வாரியாக கரோனா சோதனைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், இறந்தோர், கரோனா பேரிடருக்கு மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கரோனாவால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை, இன்னும் ஒரு நாள்தான் சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் இந்த அவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT