Published : 15 Sep 2020 01:05 PM
Last Updated : 15 Sep 2020 01:05 PM

நீட் தேர்வு: மத்திய அரசை எதிர்த்தும் பியூஷ் கோயலைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுக; பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கியது. கரோனா தொற்று அச்சம் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று (செப். 15) சட்டப்பேரவை கூடியது.

அப்போது, திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:

"வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப்பேழையில் உறங்கியும், உறங்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று.

இதே சட்டப்பேரவையில் இருமொழிக் கொள்கையை, மாநில சுயாட்சியைத் தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி, அந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவர் அண்ணா.

அண்ணாவால், கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானங்களுக்குத் தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில் நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை.

செப்டம்பர் 12-ம் தேதி, அதாவது நீட் தேர்வுக்கு முதல் நாள் மட்டும், ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ’I am sorry. I am tired’ என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் 'ஆடியோ வாய்ஸ்' ஒட்டுமொத்த தமிழக 'மாணவர்களின் வாய்ஸ்' என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

இதற்கிடையில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கின்றன. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்தனர். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்தனர்.

இந்தி வழிகாட்டுதல்கள், மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி, தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா?

ஆகவே, தமிழகச் சட்டப்பேரவையையும் தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக உறுதுணயாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x