Published : 15 Sep 2020 11:31 AM
Last Updated : 15 Sep 2020 11:31 AM
முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை ஆட்சியர் சி.கதிரவன் எச்சரித்து அனுப்பினார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் மனுக்களை அதில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வந்து மனுக்களை அளிக்க வேண்டும், முதியவர்கள், குழந்தைகள் வரக்கூடாது என்பதுள்ளிட்ட விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி பொதுமக்கள் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே, பெருந்துறையை அடுத்த பொன்னாங்காடு காலனி பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கத் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆட்சியர் சி.கதிரவன், இதனைக் கவனித்து காரில் இருந்து இறங்கினார்.
முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் திரண்டிருந்த அவர்களை எச்சரித்த ஆட்சியர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
கரோனா நோய் தொற்று பரவும் நிலையில், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என மனு அளிக்க வந்தவர்களிடம் தெரிவித்த ஆட்சியர், மனுவினை புகார் பெட்டியில் போடுமாறும், அதன் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT