Published : 15 Sep 2020 07:56 AM
Last Updated : 15 Sep 2020 07:56 AM

நாகையில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் விழா

நாகையில் நேற்று நடைபெற்ற அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் நிகழ்வுக்கு முன்னதாக நீலாயதாட்சி சமேத காயாரோகண சுவாமி முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட தங்க, வெள்ளி மீன்கள்.

நாகப்பட்டினம்

நாகையில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நேற்று நடைபெற்றது.

நாகையில் நீலாயதாட்சியம்மன் சமேத காயாரோகண சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. நாகையில் பிறந்த சிவ பக்தரான அதிபத்த நாயனார் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

தான் பிடிக்கும் முதல் மீனைசிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நேரங்களில்கடலில் கிடைப்பது ஒரு மீனாகஇருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெறுங்கையுடன் செல்வார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இவரின் பக்தியை பரிசோதித்துப் பார்க்க சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி, கடலில் மீனுக்காக அதிபத்த நாயனார் வீசிய வலையில் தங்க மீன்ஒன்றை சிக்கச் செய்தார். வலையில் வேறு எந்த மீனும் இல்லாத நிலையில், அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்காக கடலில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார்.

இதை நினைவுகூரும் வகையில்,நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யநட்சத்திர நாளில், தங்க மீனைஅதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின்போது கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாகப் புறப்பட்டு நாகை புதிய கடற்கரைக்கு செல்வார். அங்கு அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீனை அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெறும்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் ரிஷப வாகன புறப்பாடு கோயிலுக்குள்ளேயே நடைபெற்றது. நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற, அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும்நிகழ்ச்சியில் நம்பியார் நகரை சேர்ந்த சொற்ப நபர்களே கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x