Published : 15 Sep 2020 07:22 AM
Last Updated : 15 Sep 2020 07:22 AM

திருவள்ளூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.100 வரை கமிஷன் வசூலிப்பு: வியாபாரிகளுக்கே முன்னுரிமை என புகார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூலிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு விளைந்துள்ளது. இதை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக, திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம், சோழவரம், மீஞ்சூர், வில்லிவாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

“தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊத்துக்கோட்டை, கிளாம்பாக்கம், புலியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளின் நெல் ஈரமாக இருப்பதாகக் கூறி, அதை கொள்முதல் செய்ய மறுக்கும் ஊழியர்கள், வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்” என குற்றம்சாட்டப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் “கூவம், இருளஞ்சேரி, பேரம்பாக்கம் உள்ளிட்ட பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூலிக்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு 40 கிலோ என அரசு நிர்ணயித்துள்ள நிலையில், சாக்கு எடை என்று கூறி, கூடுதலாக 2 கிலோ நெல் பெறப்படுகிறது” என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (செப். 15) தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “விவசாயிகளின் புகார் தொடர்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x