Published : 15 Sep 2020 06:51 AM
Last Updated : 15 Sep 2020 06:51 AM
தெலங்கானாவில் வருவாய் துறையில் முறைகேடுகளை தடுப்பதற்காக 10 நிமிடங்களில் பத்திரப் பதிவு செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மேலவையில் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று தாக்கல் செய்தார்.
தெலங்கானா மாநிலத்தில் மாவட்ட துணை ஆட்சியர் முதல் வட்டாட்சியர்கள், கிராம வருவாய் அலுவலர்கள் வரை பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் பெறுவது சமீபத்தில் கண்டுபிடிக் கப்பட்டது. இதில் 2 வட்டாட்சியர்கள் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருந்ததை அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அதேவேளையில் மாவட்ட துணை ஆட்சியர் ரூ.1.12 கோடி லஞ்சம் வாங்க முயற்சிக்கும்போது அவரையும் கைது செய்தனர். இதேபோன்று பல கிராம வருவாய் அதிகாரிகளும், உதவி வட்டாட்சியர்களும், கோட்டாட்சியர்களும் இதில் மறை முகமாக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், பத்திரப் பதிவின்போது நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முதல்வர் சந்திரசேகர ராவ் புதிய வருவாய் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு, இதற்கான சட்டத் திருத்த மசோதாவை நேற்று அவர் மேலவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
புதிய சட்டத் திருத்த மசோதா கடந்த 3 ஆண்டுகளாக வருவாய் துறை நிபுணர்களால் வரையறுக்கப்பட்டது. இதன்படி, இனி யாரும் தவறு செய்ய முடியாது. இதற்கான அரசு இணைய முகவரியில் வட்டாட்சியர் கூட எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. பயோ மெட்ரிக், கருவிழி, ஆதார், மற்றும் புகைப்படங்களுடன் அனைத்து விவரங்களையும் தெரிவித்தால் மட்டுமே அரசின் இணையதள முகவரியை உபயோகிக்க முடியும். இதனால் பத்திரப் பதிவை இனி வெறும் 10 நிமிடங்களிலேயே முடித்துவிடலாம். இதில் யாரும் முறைகேடு செய்ய முயற்சிக்கக் கூட முடியாது. இதனால்தான் வருவாய் நீதிமன்றங்களையும் ரத்து செய்துள்ளோம். இதற்கு பதில் விரைவு நீதிமன்றங்கள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT