Last Updated : 14 Sep, 2020 08:36 PM

 

Published : 14 Sep 2020 08:36 PM
Last Updated : 14 Sep 2020 08:36 PM

கரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திராமல் 50 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை

கரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திராமல் இதுவரை50 கர்ப்பிணிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துத்துறை மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

கடந்த மார்ச் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின. கரோனா அச்சம் காரணமாக புறநகரில் இருந்த பல சிறிய மருத்துவமனைகள் கர்ப்பிணிகளை அனுமதிக்க மறுத்தன. சில தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதனால், அங்கு ஆலோசனை பெற்றுவந்த கர்ப்பிணிகள் பலர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்று கருதி அனுப்பிவைக்கப்பட்ட கர்ப்பிணிகளும் அடங்குவர்.

இதனால், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நேற்று வரை கோவை அரசு மருத்துவமனையில் 5,016 பிரசவங்கள் நிகழ்ந்துள்ள. மொத்தம் 7,300 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைகளில் குழந்தை பெற்று, அதற்கு பிறகான பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள்.

இதுதொடர்பாக மருத்துமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறும்போது, "கோவை மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 600 பிரசவங்கள் கூடுதலாக நிகழ்ந்துள்ளன.

அவசர கால சிகிச்சை

கரோனா பரிசோதனை முடிவு வெளியாக குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், அவரச சிகிச்சை தேவைப்படும்போது அவ்வாறு முடிவுக்காக காத்திருந்தால் தாய், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முழு கவச உடை (பிபிஇ கிட்) உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அதில், 50 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்த பிறகே கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கரோனா காலத்தில் மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துத்துறை தலைவர் டாக்டர் மனோன்மணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x