Published : 14 Sep 2020 07:01 PM
Last Updated : 14 Sep 2020 07:01 PM
திருச்சி மாநகரில் பொது வெளியில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்களிடம் இருந்து கடந்த 3 மாதங்களில் ரூ.11.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க காய்ச்சல் பரிசோதனை முகாம் உட்படப் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது வெளியில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் உள்ள நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை ஜூன் 4-ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
இதற்காக, மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநகரின் 4 கோட்டங்களிலும் சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஜூன் 4-ம் தேதி முதல் செப்.12-ம் தேதி வரை கோட்டம் வாரியாக ஸ்ரீரங்கத்தில் ரூ.85,818, அரியமங்கலத்தில் ரூ.3,21,337, பொன்மலையில் ரூ.1,10,970, கோ-அபிஷேகபுரத்தில் ரூ.5,13,646 என மொத்தம் ரூ.10,31,771 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்களிடம் இருந்து ஜூன் 4-ம் தேதி முதல் செப்.12-ம் தேதி வரை கோட்டம் வாரியாக ஸ்ரீரங்கத்தில் ரூ.2,300, அரியமங்கலத்தில் ரூ.27,000, பொன்மலையில் ரூ.8,700, கோ-அபிஷேகபுரத்தில் ரூ.1,27,507 என மொத்தம் ரூ.1,65,507 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதன்மூலம், திருச்சி மாநகராட்சியில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நபர்களிடம் இருந்து கடந்த 3 மாதங்களில் மொத்தம் ரூ.11,97,278 வசூலிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT