Published : 14 Sep 2020 04:27 PM
Last Updated : 14 Sep 2020 04:27 PM
கரோன கால நிவாரண நிதி கேட்டு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திருச்சி ஆட்சியர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்கத் தலைவர் செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்டத்தில் சுமார் 200 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இந்த பேருந்துகளில் சுமார் ஆயிரம் ஓட்டுநர், நடத்துனர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் கரோனா ஊரடங்கால் வாழ்வாதரம் இழந்து சிரமத்தில் உள்ளனர்.
இதனால் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தோம். இழப்பீடு வழங்காததால் ஜூலை 29-ல் போராட்டம் அறிவித்தோம். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நிவாரணம் வழங்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். இருப்பினும் அதில் 50 சதவீத உரிமையாளர்கள் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணம் வழங்கவில்லை.
எனவே ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நிவாரணம் வழங்காத தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கரோனா கால நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 29-க்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT