Published : 14 Sep 2020 03:52 PM
Last Updated : 14 Sep 2020 03:52 PM
"தமிழ்நாட்டு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை பணிமனை முன் 3-வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது.
ரயில்வே துறையில் வெளி மாநிலத்தவரை அதிகளவில் பணியமர்த்துவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செப்.11, 12 மற்றும் செப்.14 முதல் செப்.18 வரை திருச்சி பொன்மலை பணிமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதன்படி, 3-வது நாளான இன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் பொன்மலை பணிமனையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாகப் பேரியக்கத்தின் மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன் பேரணியைத் தொடக்கி வைத்தார்.
"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 90 சதவீதத்தை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றி வருவோரில் 10 சதவீதத்துக்கு அதிகமான வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 90 சதவீதத்தைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பா.மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் ஆ.குபேரன், மத்தியக் குழு உறுப்பினர் சி.பிரகாஷ், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழ் கலை இலக்கியப் பேரவை நிர்வாகி சின்னமணி, மகளிர் ஆயம் வழக்கறிஞர் செந்தமிழ்ச் செல்வி மற்றும் பொன்னிவளவன் உட்பட திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT