Published : 14 Sep 2020 01:01 PM
Last Updated : 14 Sep 2020 01:01 PM
புதுச்சேரியில் சினிமா, டிவி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்துள்ளார்.
புதுச்சேரி அரசிமிருந்து கடந்த 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 32 கோப்புகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதில் சினிமா படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் கோப்பும் ஒன்று. புதுச்சேரியில் ஏராளமான படப்பிடிப்புகள் நடப்பது வழக்கம். பல மொழிப் படத் தயாரிப்பாளர்களும் இங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். படப்பிடிப்புக்கு மிகக் குறைந்த கட்டணம் நிர்ணயித்திருந்ததால் சினிமாத்துறையினர் இங்கு குவிந்தனர். இதற்கிடையே படப்பிடிக்குக் கட்டணத்தை உயர்த்த பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு, கட்டணத்தை உயர்த்தவில்லை.
கரோனா காலம் தொடங்கிய பிறகு நடிகர் விஜய்யைத் தவிர வேறு யாரும் புதுச்சேரிக்குக் கரோனா நிவாரண நிதி தரவில்லை. கரோனா காலத்தில் பெட்ரோல், டீசல், மதுபானங்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டன. மின்கட்டணமும் உயர்ந்தது. இச்சூழலில் புதுச்சேரியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது. அது தொடர்பாக திருத்தப்பட்ட கட்டணத்துக்கு அனுமதி கோரித் துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பினர். அக்கோப்புக்குக் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.
இதையடுத்து விரைவில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணங்களுக்கான அறிவிப்புகளை அரசு முறைப்படி வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT