Last Updated : 14 Sep, 2020 12:06 PM

 

Published : 14 Sep 2020 12:06 PM
Last Updated : 14 Sep 2020 12:06 PM

தீபாவளிக்காக கைத்தறி சேலைகள் உற்பத்தி தீவிரம்: வாரம் 5 நாள் வேலை கிடைப்பதால் தொழிலாளர்கள் ஆறுதல்

அருப்புக்கோட்டையில் கைத்தறிச் சேலை நெய்யும் செங்குட்டுவன். 

விருதுநகர்

தீபாவளிப் பண்டிகை நெருங்கு வதையொட்டி அருப்புக்கோட் டையில் கைத்தறிச் சேலைகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக அனைத்துத் தொழில்களும் முடங்கின. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. தொழில் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. இந்நிலையில், தீபாவளி நெருங்குவதால் கைத்தறிச் சேலை உற்பத்தி மீண்டும் வேகமெடுத் துள்ளது.

அருப்புக்கோட்டையில் 1,500-க்கும் மேற்பட்ட கைத்தறி, 15,000-க்கும் அதிகமான விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு பாலிகாட்டன், பருத்தி, புட்டா ரகங்கள் தவிர 60-60, 80-60, 80-120 எனப் பல்வேறு நூல் ரகங்களில் விசைத்தறிச் சேலைகள் நெய்யப்படுகின்றன. கைத்தறியில் பருத்திப் புடவைகள் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகின்றன.

கடந்த 4 மாதங்களாக வேலை இழந்து தவித்து வந்த கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு தற்போது உற்பத்திக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

சைலஜா

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி செங்குட்டுவன் (70) கூறியதாவது:

கைத்தறித் தொழிலுக்கு அரசு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள என்னைப் போன்ற தொழிலாளர்கள் கரோனா ஊரடங்குக் காலத்தில் பிழைக்க வழியின்றித் தவித்தோம். எனது வாழ்நாளில் தொடர்ந்து 4, 5 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தது இந்த கரோனாக் காலத்தில்தான். தற்போது, மீண்டும் வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது ஆறுதல் அளிக்கிறது.

கைத்தறிச் சேலை நெய்து முடிக்க சராசரியாக 2 நாட்கள் ஆகும். மேலும், கையால் நூல் கோர்த்து தறியில் நெய்வதால் நூல் நெருக்கமாகவும் தரமாகவும் இருக்கும். ஒரு சேலைக்கு ரூ.300 கூலி கொடுக்கிறார்கள். தீபாவளியையொட்டி தற்போது ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன என்று கூறினார்.

கல்குறிச்சியைச் சேர்ந்த சேலைகளுக்கு வண்ணம் பூசும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி சைலஜா கூறுகையில், கரோனாவால் வேலையிழந்து தவித்தோம். தற்போது கைத்தறி, விசைத்தறிக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சேலை உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படுவதால் அருப்புக் கோட்டைக்கு வேலைக்குவர முடிகிறது. வாரத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. தீபாவளிப் பண்டிகையை நம்பித்தான் இத்தொழிலும், தொழிலாளர்களும் உள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x