Published : 14 Sep 2020 12:14 PM
Last Updated : 14 Sep 2020 12:14 PM

ஆங்கிலப் பாடவேளையை அதிகரிக்க தமிழ்ப் பாடவேளையைக் குறைப்பதா?- சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை

மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறனை அதிகரிக்க ஆங்கிலப் பாடவேளையைக் கூட்ட தமிழ் வகுப்புகளைக் குறைப்பதை ஏற்கமுடியாது. மாணவர்கள் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதை வரவேற்கிறோம். அதற்கு தினமும் ஒரு பாடவேளையை அதிகரிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்ப் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களின் தாய்மொழிக்கு ஒரு நாளைக்கு ஒரு பாடவேளை கூட இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான உத்தேசப் பாடத்திட்டத்தில்தான் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஒரு மொழித்தாள், ஓர் ஆங்கிலத் தாள், ஒரு முதன்மைத் தாள், ஒரு விருப்பப் பாடத்தாள் என ஒவ்வொரு பருவத்திற்கும் 4 தாள்கள் இருக்கும்.

முதல் இரு ஆண்டுகளுக்கான 4 பருவங்களுக்கு மட்டும் இந்த நடைமுறை இருக்கும். மூன்றாவது ஆண்டின் இரு பருவங்களிலும் முதன்மைப் பாடத்தாள்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் வீதம் வாரத்துக்கு மொத்தம் 30 பாடவேளைகள் நடத்தப்படும்; அவற்றில் 6 பாடவேளைகள் மொழிப்பாடத்திற்கு, அதாவது தமிழ்ப் பாடத்திற்கு ஒதுக்கப்படும். இது தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தேசப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடவேளைகள் வாரத்திற்கு ஆறிலிருந்து நான்காக குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, உயர்கல்வித்துறை செயலாளரின் யோசனைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஆங்கிலப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காகத்தான் தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படுவதற்கு இதுதான் காரணமெனில் அதை ஏற்க முடியாது.

மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும், அதே நேரத்தில், ஆங்கிலேயர்களுக்கு இணையாக நமது மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் அளவுக்கு மொழித்திறனை வளர்க்க வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை ஆகும். வேலைவாய்ப்புக்கான நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடலில் மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் தடுமாறுவது உண்மை தான். அந்த நிலையை மாற்றுவதற்காக மொழித்திறன் மேம்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆனால், அதற்கான தமிழ்ப் பாடவேளைகளை தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாம் வகுப்பிலிருந்து தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது என்றாலும் கூட, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்தான் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகள், புதினங்கள் போன்றவை பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன.

அவை மாணவர்களிடம் சமூகப் பொறுப்பை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தமிழ் இலக்கியங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவும், பல்வேறு வகையான அறங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மேலாக கல்லூரிப் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த, எதிர்காலம் சார்ந்த பதற்றம் மற்றும் மன உளைச்சல்களைப் போக்குவதற்கான அருமருந்தாக திகழ்பவை தமிழ் இலக்கியங்கள்தான். அதனால்தான் எனது முகநூல் பக்கத்தில் சிலப்பதிகாரத்தை உரையுடன் பதிவிட்டு வருகிறேன். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டும் பார்க்கக் கூடாது; அது ஒரு வாழ்க்கைப் பாடம். அதனால் தமிழ்ப் பாடவேளை குறைப்பை அனுமதிக்கவே முடியாது.

ஆங்கில மொழித்திறனை அதிகரிப்பதற்கான முயற்சியை பாமக ஆதரிக்கிறது. அதற்காக தினமும் ஒரு பாடவேளையை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் விடுமுறை நாட்களிலும் கூட சிறப்பு வகுப்புகளை நடத்த எந்தத் தடையும் இல்லை. இப்போது ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி நடப்புக் கல்வியாண்டு முதல் கல்லூரிகள் ஒருவேளை மட்டும்தான் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தினமும் ஒரு பாடவேளையை அதிகரிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுக்கு வாரத்திற்கு 6 பாடவேளைகள் கிடைக்கும். எனவே, அதைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்ப் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலை. கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x