Published : 14 Sep 2020 07:43 AM
Last Updated : 14 Sep 2020 07:43 AM

கரோனா பரவல் அதிகரிப்பதால் மூத்த குடிமக்கள், நோயாளிகள் வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது: ரயில்வே, போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மூத்த குடிமக்கள், சிறுவர்கள், வேறு நோய் உள்ளவர்கள் வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்களின் சேவைகளும் தொடங்கியுள்ளன. மக்கள் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மக்களின் அத்தியாவசியதேவை என்பதால்தான் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் பயணம் செய்வோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் மக்கள் வெளியூர் பயணம் செய்வது அதிகரிக்கும்.

எனவே, மக்கள் இனி அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். பயணத்தின்போது அரசு அளித்துள்ள அறிவுரைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. முகக் கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்றவேண்டும்.

எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை கரோனா எளிதில் தாக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x