Published : 14 Sep 2020 07:24 AM
Last Updated : 14 Sep 2020 07:24 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனின் அரசியல் நடவடிக்கைகள் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பல்வேறு வியூகங்களையும் அக்கட்சி வகுத்து வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், பேட்மின்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார். மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்துவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சியின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.
இதேபோல், தனது மூத்த மகன் விஜயபிரபாகரனை அரசியலில் முன்னிலைப்படுத்தி வருகிறார். கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்குச் செல்லும் விஜயபிரபாகரன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். இது அக்கட்சியினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு சந்திப்பது, மாவட்டவாரியாக தேமுதிகவின் செல்வாக்கு, புதிய நிர்வாகிகள் நியமனம், இளைஞர்களுக்கு முக்கியத்துவம், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சிறப்பு குழு அமைப்பது உள்ளிட்டவை குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையிலான மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், வரும் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. அவரது மகன் விஜயபிரபாகரனும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்.
கட்சிக்கு உத்வேகம்
இதுதொடர்பாக தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘விஜயபிரபாகரனின் செயல்பாடுகள் கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. விஜயகாந்தைப் போன்ற முக அமைப்பு, அவரது பாணியில் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று தொண்டர்களிடம் பேசி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றனர்.
இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைநடத்தி வருகிறார்.
விஜயபிரபாகரன், அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். பொதுகூட்டங்களில் மக்களின் பிரச்சினைகள் குறித்து சாதாரண மொழியில் பேசிஅனைவரையும் கவருகிறார்.கட்சியில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரின் அரசியல் பணிகளை பார்த்த பிறகே அவருக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT