Last Updated : 13 Sep, 2020 04:45 PM

1  

Published : 13 Sep 2020 04:45 PM
Last Updated : 13 Sep 2020 04:45 PM

கேள்வித்தாள் எப்படி இருந்தாலும் வருந்த வேண்டாம்!; பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டி நீட் தேர்வெழுத அனுப்பிய பெற்றோர்

நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

திருச்சி

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், "கேள்வித்தாள் எப்படி இருந்தாலும் வருந்த வேண்டாம். தைரியமாக, தன்னம்பிக்கையுடன் தேர்வெழுது" என்று நீட் தேர்வெழுதச் சென்ற தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் பலரும் நம்பிக்கை கூறி அனுப்பிவைத்ததை திருச்சியில் காண முடிந்தது.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (செப். 13) நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வெழுத பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9,498 பேருக்குத் தேர்வுகூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.

மாணவர்கள் தேர்வெழுதுவதற்காக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 22 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாணவ - மாணவிகள் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் தேர்வுகூட அனுமதிச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை காவல்துறையினர் சரி பார்த்தனர். அவர்களைத் தொடர்ந்து வெப்பமானி மூலம் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வெழுத வந்த மாணவ - மாணவிகள் பெரும்பாலானோருடன் அவர்களது பெற்றோரும் உடன் வந்திருந்தனர். நுழைவுத் தேர்வுகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்புவது பெற்றோரின் வழக்கம்.

ஆனால், நீட் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் பலரும் வாழ்த்து கூறியதுடன், "கேள்வித்தாள் எப்படி இருந்தாலும் வருந்த வேண்டாம். தைரியமாக, தன்னம்பிக்கையுடன் தேர்வெழுது" என்று நம்பிக்கை கூறி அனுப்பிவைத்ததைக் காண முடிந்தது.

அதேபோல், நீட் தேர்வு மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் "பதற்றம் வேண்டாம். இயல்பாக வந்து தேர்வெழுதுங்கள்" என்று மாணவ - மாணவிகளுக்கு அடிக்கடி அறிவுரைகள் கூறப்பட்டன.

இதுகுறித்து, திருச்சி தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம் முன் கூடியிருந்த பெற்றோர் சிலரிடம் கேட்டபோது, “நீட் தேர்வு பிள்ளைகளுக்கு முக்கியம்தான். ஆனால், அதைவிட பிள்ளைகள்தான் நமக்கு முக்கியம். பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதற்கு தோல்வி பயம், பிள்ளைகள் மீதான பெற்றோரின் எதிர்பார்ப்பு திணிப்பு உட்பட பல்வேறு காரணங்களை உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது அவசியம். நீட் தேர்வை அவர்களது வாழ்க்கையாக நாங்கள் பார்க்கவில்லை. பிள்ளைகளுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளில் ஒன்றாகவே கருதுகிறோம்" என்றனர்.

அவதிப்பட்ட பெற்றோர்

நீட் தேர்வெழுத திருச்சியில் மையம் ஒதுக்கப்பட்ட வெளி மாவட்டத்தினர் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஆனால், 11 மணிக்குப் பிறகே மாணவ - மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை மாணவ - மாணவிகள் காத்திருக்க வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், தேர்வு மையத்துக்குள் செல்லும் வரை பெற்றோருடன் கார்களிலும், சாலையோரங்களிலும், மரத்தடி நிழல்களிலும் மாணவ - மாணவிகள் காத்திருந்தனர். பிற்பகலில் வெயில் கொளுத்தியபோது பெற்றோர் சிரமப்பட்டனர். குறிப்பாக, கழிப்பிட வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x