Published : 13 Sep 2020 01:51 PM
Last Updated : 13 Sep 2020 01:51 PM

ஊரடங்கால் முடங்கிய கரிமூட்டத் தொழில்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் கரிமூட்டம் தொழில் முடங்கியதில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6.17 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. மீதி தரிசு நிலங்களாக உள்ளன. மாவட்டத்தில் முதன்மைத் தொழிலான விவசாயம், மழை பெய்தால் மட்டுமே நடைபெறும். விவசாயம் பாதிக்கப்பட்டதால் ஏராளமான விவசாயக் குடும்பங்கள் பிற மாவட்டங்கள், பெருநகரங்களுக்கு கூலித்தொழில் மேற்கொள்ள சென்றுள்ளனர். விவசாயம் பொய்ப்பதால் பெரும்பாலான தரிசு நிலங்களில் காட்டுக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வெட்டி கரி மூட்டத் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார பகுதிகளில் அதிகளவில் கரிமூட்டத் தொழில் நடைபெறுகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் விவசாயப் பணிகள் தவிர மற்ற நாட்களில் விறகு வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றனர். கடலாடியைச் சேர்ந்த சித்திரைவேல் கூறியதாவது, ஆண்டுதோறும் கோடை காலங்களில் கரிக்கு அதிக விலையும் குறிப்பாக வேர்கட்டை கரிக்கு ஒரு மூட்டை ரூ.1200-ம், விறகு கரிக்கு ரூ.900 என விலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக விறகுக் கரி விற்பனை இன்றி தேங்கியுள்ளது. பிற மாநிலங்களுக்கு விறகு கரி அனுப்ப முடியாததால் கரிக்கு கூடுதல் விலை கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. வாங்குவதற்கு கூட வியாபாரிகள் இல்லை. இதனால் விறகு வெட்ட செலவு செய்த முதலீட்டு பணமும் முடங்கியுள்ளது.

இதனால் இதையே நம்பி இருந்த கூலித்தொழிலாளர்கள் வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். காட்டு கருவேல கரிக்கு கூடுதல் விலை கிடைக்கவும், தேங்கியுள்ள கரியை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x