Published : 13 Sep 2020 01:17 PM
Last Updated : 13 Sep 2020 01:17 PM
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய ராமநத்தம் ஊராட்சி காந்திநகரில் பழங்குடியின மற்றும் நரிக்குறவ சமூகத்தினர் பெருமளவில் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இரு ஆசிரியர்களைக் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 மாணவிகள் உள்பட 37 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்கள் அனைவரும் பழங்குடியின மற்றும் நரிக்குறவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தர வருவாயின்றி, வேட்டையாடுதலையே முக்கியத் தொழிலாகக் கொண்ட இவர்களது பெற்றோர் போதிய கல்வித் திறன் இல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களின் சந்ததிகளுக்கு கல்வித் திறனை அளிக்கும் வகையில் இப்பகுதியில் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. இப்பள்ளியின் தலைமையாசிரியை சாந்தி, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களின் பிள்ளைகளை பள்ளிக்கு வரச் செய்துள்ளார். இதனால் தற்போது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், இப்பகுதி மாணவர்களின் பெற்றோருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளின் அவசியத்தை தலைமையாசிரியை சாந்தி, ஆசிரியை உமாராணி எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்த தகவலறிந்து பள்ளிக்குச் சென்றோம். மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் பைகளை வழங்கிக்கொண்டிருந்தார் ஆசிரியை சாந்தி. அப்போது அவர் கூறியது:
இப்பகுதி மக்களின் அறியாமையை ஓரளவுக்கு போக்கியிருக்கிறோம். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் ஏற்பட்டிருக்கிறது.
பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதை பார்த்த இந்த மாணவர்கள், தங்கள் வீடுகளிலும் தூய்மையை வலியுறுத்துவதாக பெற்றோர் கூறுவதை கேட்கும் போது பெருமையாக உள்ளது. இவர்களது பேச்சு வழக்கு இன்னும் மாறவில்லை. அதனால் இப்பகுதியில் வசிக்கும் இதர சமூகத்தினர் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கத் தயங்குகின்றனர் என்று தெரிவித்தார். ந.முருகவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT