Published : 13 Sep 2020 01:14 PM
Last Updated : 13 Sep 2020 01:14 PM

மாணவர்கள் பயன்பெற என்ஐடி பேராசிரியர் அழைப்பு; லேசர் கற்றை பயன்பாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: அண்ணாமலை பல்கலை. இணையவழி நிகழ்வில் தகவல்

கடலூர்

உற்பத்தியியல் பொறியியல் துறை மாணவர்கள் தங்கள் படிப்புடன், லேசர் கற்றை பயன்பாடு தொடர்பாக அறிந்தால், அதில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாக திருச்சி என்ஐடி பேராசிரியர் துரை செல்வம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தியியல் பொறியியல் துறையின் மாணவர்கள் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி அண்ணாமலை நகர் மையம், இன்ஸ்ட்டியூஷன் ஆஃப் எஞ்சினியர் - புரடக்‌ஷன் இஞ்சினியர் மாணவர்கள் பிரிவு ஆகிய மூன்று அமைப்புகளின் சார்பாக ‘லேம்ப்’ என்ற தலைப்பில் இணைய வழி சிறப்பு நிபுணர் உரை நடைபெற்றது.

உற்பத்தியியல் பொறியியல் துறையின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ‘உலகத்தரம் வாய்ந்த மிக நுண்ணிய சாதனங்களில் லேசர் கதிர்களின் பங்கு’ என்ற தலைப்பில் திருச்சி என்ஐடி பேராசிரியர் துரை செல்வம் இணைய வழியில் உரையாற்றினார். “லேசர் கதிர்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்வதை போல், லேசர் கதிர்களைப் பயன்படுத்தி உலோகங்கள், அலோகங்கள், உலோக கலவைகள் ஆகியவற்றை இணைக்கவும் செம்மை படுத்தவும் முடியும். 300 வாட்ஸ் முதல் 3000 வாட்ஸ் திறன் உள்ள லேசர் கதிர்களைப் பயன்படுத்தி மிகவும் நுண்ணிய சாதனங்களையும் மிக நுட்பமான முறையில் தயாரிக்க இயலும்.

‘லேசர் அப்லேஷன்’ என்ற முறையில் மிகவும் நுண்ணிய நானோ கோட்டிங் செய்யபடுகிறது. ‘லேசர் சின்டரிங்’ முறையில் மிகவும் கடினமான ராக்கெட் இன்ஜின் உதிரி பாகங்கள் செய்யப்படுகின்றன. ‘லேசர் வெல்டிங்’ முறையில் இருவேறு உலோகங்களை எளிதில்இணைத்து அணு உலைகளின் உதிரி பாகங்கள் செய்யப்படுகின்றன. ‘லேசர் சர்ஃபேசிங்’ என்ற முறையில் அதிக வெப்பத் தையும், உராய்வையும், தாங்கக் கூடிய உலோக கலவைகள் உருவாக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் போன்களில் பயன் படும் மைக்ரோசிப்கள் ‘லேசர் மெஷினிங்’ என்ற முறையில் செய்யப்படுகின்றன. ‘மைக்ரோ ஜாயினிங்’ என்ற முறையில் மின்னணு சாதனங்களின் சர்க்யூட் போர்டுகள் தயாரிக் கப்படுகின்றன. ‘லேசர் மார்க்கிங்’ என்ற முறையில் கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

இவ்வாறாக லேசர் கற்றைகளின் பயன்பாடு உற்பத்திப் பொறியியல் துறையில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக உற்பத்தி பொறியியல் துறையில் ரூ. 1.50 கோடி மதிப் பிலான ‘ரோபோட்டிக் வெட்டில் மெஷின்’ உள்ளது. உற்பத்திப் பொறியியல் மாணவர்கள் தங்கள் பட்டபடிப்புடன் லேசர் கற்றை பயன்பாடு அறிவையும் வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்புகள் இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் குவிந்து கிடக்கிறது” என்று திருச்சி என்ஐடி பேராசிரியர் துரை செல்வம் தெரிவித்தார்.

பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் சிறப்பு விருந்தினர் முனைவர் துரை செல்வத்துடன் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில், இணையவழி மூலம் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை இணைப்பேராசிரியர் முனைவர் ப.சிவராஜ் தொகுத்து வழங்கினார். வேலை வாய்ப்புகள் இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் குவிந்து கிடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x