Last Updated : 13 Sep, 2015 09:46 AM

 

Published : 13 Sep 2015 09:46 AM
Last Updated : 13 Sep 2015 09:46 AM

தக்கோலம் - அரக்கோணம் இடையே புதிய ரயில் பாதை பணிகள் நிறுத்தம்: 4 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்கள்

காஞ்சிபுரத்தை அரக்கோணத்துடன் இணைக்கும் ரயில் பாதை பணிகளுக்கு பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்காததால் தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய 8 கி.மீ. தூர ரயில்பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் எப்போது நிறைவடையும் என சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் காத்திருக்கின்றனர்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் புராதண கோயில்களை காண வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, காஞ்சிபுரம் - அரக்கோணம் - சென்னை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் என சுற்றுவட்டப் பாதையில் ரயில் இயக்க முடிவு செய்து தண்டவாளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கடந்த 2000-ம் ஆண்டில் செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி மின்மயமாக்கப்பட்டது. பணிகள் முடிந்ததும், காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரக்கோணம் அருகே அமைந்துள்ள ராஜாளி விமானப் படை தள நிர்வாகம் அப்பகுதியில் ரயில் பாதையை மின்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், ரயில் பாதையை மாற்று வழியாக 8 கி.மீ., தூரம் சுற்றி அமைக்கவும். அதற்கான செலவை, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையும் இணைந்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, செங்கல்பட்டில் இருந்து தக்கோலம் வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டது. தக்கோலம் ரயில் நிலையத்தில் இருந்து, சிறிது தூரம் வரை மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின் பணிகள் நடைபெறவில்லை. இதனால், அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சுற்றுவட்டப் பாதையில் ரயிலை இயக்க முடியாததால் சென்னையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் ரயில் நிலையம் வரை வந்து பின்னர் அதே தடத்தில் சென்னைக்கு திரும்பச் செல்கின்றன.

கடந்த 2007-ல், ரயில்வே நிர்வாகம் தக்கோலத்தை அடுத்த கல்லாறு பகுதியில் இருந்து பொய்கைபாக்கம், மேல்பாக்கம் வழியாக அரக்கோணத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கியது. இதில், 8 கி.மீ., சுற்றுப் பாதையில் தண்டவாளம் மற்றும் மின் கம்பிகள் செல்வதற்கான இரும்பு தூண்கள் நடப்பட்டன. அத்துடன் அந்த பணியும் நிறுத்தப்பட்டது. அரக்கோணம் ரயில் நிலையத்துடன் இணையும் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த பணி நிறுத்தப் பட்டதாக காரணம் கூறப்பட்டது. பின்னர் அந்த பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தண்டவாளம் இணைக்கப்பட்டது.

ஆனால், கல்லாறு பகுதியில் ஏற்கெனவே உள்ள தண்டவாளத்தில் புதிய ரயில் பாதைக்கான தண்ட வாளம் இணைக்கப்படாமலும், 8 கி.மீ., நீளத்துக்கு மின்மயமாக் கும் பணிகள் ஏதும் மேற்கொள்ளப் படாமலும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது.

இப்பணிகள் நிறைவுபெற்றால் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை சென்னைக்கு செல்லாமல் காஞ்சிபுரம் வழியாக தென் மாவட்டங்களுக்கு திருப்ப முடியும். சென்னை - காஞ்சிபுரம் - அரக்கோணம் - சென்னை - காஞ்சிபுரம் சுற்றுவட்டப் பாதையில், ஏராளமான ரயில்களையும் இயக்க முடியும்.

ஆனால், இந்திய பாதுகாப்புத் துறை புதிய பாதையின் பணிகளுக்கு தர வேண்டிய ரூ.30 கோடி நிதியை தராமல் உள்ளதால் மேற்கூறிய பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, காஞ்சிபுரம் ரயில் பயணிகள் தரப்பில் கருத்து கூறும்போது, ‘காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணத்துக்கு போதிய பேருந்து வசதியில்லை. இதனால், ரயிலில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர், அரக்கோணம் ரயில் நிலையம் செல்ல முடியாமல், செங்கல்பட்டு அல்லது சென்னை சென்ட்ரலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதனால், கல்லாறு பகுதியில் இருந்து அரக்கோணம் செல்வதற் கான புதிய ரயில் பாதையின் மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு அலுவலர் வெங்கடசாமி கூறும்போது ‘திருமால்பூர்-அரக்கோணம் இடையேயான 7 கி.மீ., தொலைவு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் அளிக்க வேண்டிய ரூ.30 கோடி நிதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும், விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x