Published : 12 Sep 2020 08:57 PM
Last Updated : 12 Sep 2020 08:57 PM
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையாளர் தலைமையில், ராயபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் கரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
சென்னை காவல் ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு வருமாறு:
“சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களை பார்வையிட்டு நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டார். மேலும் அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை காவல் ஆணையார் மகேஷ்குமார் அகர்வால்,உத்தரவின்பேரில், ராயபுரம், எஸ்.எம். கோவில் தெருவில் உள்ள செட்டி தோட்டம் வீட்டு வசதி வாரியம், மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள குஜராத்தி காலனி மற்றும் ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றியும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தயக்கமின்றி எந்த நேரத்திலும் காவல்துறையை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
இன்றைய கால கட்டத்தில் கணினி வழி குற்றங்களான சைபர் ஹராஸ்மென்ட், சைபர் ஸ்டால்க்கிங், சைபர் புல்லிங், சைபர் க்ரூமிங் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு குறித்தும், இக்குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இணையதள பாதுகாப்பு குறித்தும் யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ID, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் (Strong Password) கணினிகளை பயன்படுத்தவும், தற்போது குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களிடம் அலைபேசி மற்றும் கணினியை கையாளும் பொழுது பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பது மிகவும் அவசியம் மற்றும் (Child lock) செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், ஏதேனும் பிரச்சனையென்றால் காவல்துறையின் காவலன் SOS செயலி மற்றும் அவசர உதவி உண்கள் 1091, 1098, 9150250665 (கட்டுப்பாட்டறை எண்) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களுடன் இணைந்து மேற்படி பகுதிகளிலுள்ள சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், வரைபட புத்தகங்கள், பென்சில் மற்றும் வர்ணத்தூரிகைகள் வழங்கப்பட்டன”.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment