Published : 12 Sep 2020 08:29 PM
Last Updated : 12 Sep 2020 08:29 PM
சிவகங்கை நகராட்சியில் 11 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைப் பணி முடிவடையாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் ரூ.23.50 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி 2007 மார்ச்சில் தொடங்கியது. மூன்று கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக நகர் முழுவதும் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது. ஒப்பந்ததாரரின் தாமதத்தால் குழாய்கள் பதிக்கும் பணி தாமதமானது.
தொடர்ந்து 2-ம் கட்டமாக சுந்தரநடப்பு அருகே பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு முத்துப்பட்டி அருகே 80 ஏக்கரில் சுத்திகரிப்புநிலையம் அமைக்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக நகர் பகுதியில் உள்ள 15 ஆயிரம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுடன் பாதாளச் சாக்கடை குழாயை இணைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கியது. தற்போது 800 கட்டிடங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் குழாய்கள் பதித்து பல ஆண்டுகள் ஆனதால் கழிவுநீர் முழுவதும் சுத்திகரிப்பு நிலையம் செல்லாமல் ஆங்காங்கே மேன்ஹோலில் தேங்கி கிடக்கிறது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் ஓடுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டே முடிய வேண்டிய இத்திட்டம் 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை முடிவடையாமல் உள்ளது. சிவகங்கை நகர மக்களை பாடாய் படுத்தும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சோனைமுத்து கூறியதாவது: பாதாளச் சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் கட்டிடங்களை பாதாளச் சாக்கடையுடன் இணைத்து வருகின்றனர். இதனால் கழிவுநீர் வீதிகளில் ஓடுகிறது.
மேலும் பாதாளச் சாக்கடையுடன் இணைப்பு கொடுக்கும்போது 20 அடி நீளம் வரை கட்டிட உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. ஆனால் 5 அடிக்கே ரூ.பல ஆயிரம் வசூலிக்கின்றனர். மேலும் திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பாதாளச் சாக்கடைக்கு மாதம் ரூ.120 வசூலிக்கின்றனர்.
இதுபோன்ற குறைகளை சரிசெய்து பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று கூறினார்.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் சக்தி கூறுகையில், ‘ சுத்திகரிப்பு நிலையத்திற்கு தினமும் 49.2 லட்சம் லிட்டர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 லட்சம் லிட்டர் செல்கிறது. பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. அடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்,’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT