Published : 12 Sep 2020 08:06 PM
Last Updated : 12 Sep 2020 08:06 PM

நடைபாதையில் துணி வியாபாரம் பார்க்கும் விஜய் பட நடிகர்: இரு கைகளை இழந்தும் தளராத நம்பிக்கை

மதுரை

நடிகர் விஜய்யின் சர்க்கார் படத்தில் நடித்த மாற்றுத்திறனாளி நடிகர், மதுரையில் நடைபாதைகளில் ரெடிமேட் ஆடைகளை வியாபாரம் செய்கிறார். இவர் இரு கைகளை மின்சார விபத்து ஒன்றில் இழந்தாலும் தளராத தன்னம்பிக்கையால் சுயமாக தொழில் செய்து வாழ்கிறார்.

விஜய் நடித்த சர்கார் படத்தில் அவர் ஒரு காட்சியில், தனது தாயை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளையும், அவர்களுக்கு அந்த விபத்துகள் ஏற்படக் காரணமான அரசுத் துறைகளின் பின்னணியை பற்றியும் உருக்கமாக சொல்வார்.

அதில் விஜய் பேசும்போது, ‘‘மழையில் அறுந்துவிழுந்த கரெண்ட் கம்பியை பிடித்து 3 குழந்தைகள் இறந்துவிட்டது, அவர்களைக் காப்பாற்றச் சென்ற இந்த கூலி தொழிலாளியோட இரண்டு கையும் போச்சு’’ என்று படுக்கையில் இரு கைகளையும் இழந்த நிலையில் சிகிச்சை பெறும் ஒருவரை நோக்கிக் காட்டுவார். அவர், மதுரை பெரியார் நிலையம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன். 39 வயதான இவர் தன்னுடைய 20 வயது வரை எல்லோரையும் போல இரு கைகளுடன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

2000-ம் ஆண்டு டெல்லிக்கு மதுரையில் உள்ள தான் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு தேவையான துணிகளை கொள்முதல் செய்ய சென்றுள்ளார். அப்போது மழை பெய்யும்போது தான் தங்கியிருந்த கட்டிடத்தில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்கும்போது அறுந்து விழுந்த மின்கம்பியை தெரியாமல் தொட்டதில் துாக்கி வீசப்பட்டார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவரின் உயிரைதான் மருத்துவர்கள் காப்பாற்ற முடிந்தது. இரு கைகளையும் இழந்தார்.

அதுவரை பார்த்து வந்த வேலையும் பறிப்போனது. சில ஆண்டுகள் வீட்டிலே முடங்கி கிடந்த அவர், 2004-ம் ஆண்டு சென்னைக்கு சென்று அங்கு சாலையோரங்களில் உள்ள நடைபாதையில் ட்ரை சைக்கிளில் ரெடிமேட் ஆடைகளைப் போட்டு வியாபாரம் செய்து வந்தார்.

அதில் கிடைத்த வருமானத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு அனுப்பியபோக தன்னுடைய அன்றாட செலவையும் பார்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில்தான், தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் சர்க்கார் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், தொடர்ந்து படங்களில் நடிக்க இவர் ஆர்வம் காட்டவில்லை. அதனால், இவர் நடித்த ஒரே படமும், கடைசி படமும் சர்க்கார் படமானது.

இந்நிலையில் எல்லோர் வாழ்க்கையும் புரட்டிப்போட்ட கரோனா தொற்று நோய் இவரது வாழ்க்கையும் புரட்டிப்போட்டது. தொற்று நோய் அச்சத்தால் சென்னையில் இருந்து எல்லோரும் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் இவரும் ட்ரை சைக்கிளிலே சென்னையில் இருந்து 4 நாட்கள் பயணம் செய்து மதுரை வந்தடைந்தார். இரு கைகளையும் இழந்தாலும், ஜாகீர் உசேனால் மற்றவர்களை போல் சைக்கிள் ஓட்டுவார். மதுரை வந்த அவர், மீண்டும் சென்னையில் பார்த்து வந்த நடைபாதை துனிக்கடையை மதுரையிலும் தொடர்ந்தார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சாலையில் கடை விரித்து சிறிய அளவு ரெடிமேடு ஆடைகளை விரித்து கூவி, கூவி வியாபாரம் செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானம், இவரது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு சரியாகிறது. யாரையும் சாந்து வாழாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.

ஜாகீர் உசேன் கூறுகையில், ‘‘நான் இரண்டு கைகளையும் இழப்பதற்கு முன் விளையாட்டு வீரன். உள்ளூரில் மட்டுமில்லாது வெளியூர்களுக்கும் சைக்கிள் ரேஸ், கபடி போட்டிகளில் விளையாட செல்வேன். ஒரு முறை மைசூரில் நடந்த சைக்கிள் ரேஸ் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். சினிமாவில் எங்களைப் போன்ற இரு கைகளை, கால்களை இழந்தவர்களை பொம்மை போல் காட்சிப்பொருளாகவே மட்டுமே காட்டுகிறார்கள். பயன்படுத்துகிறார்கள்.

அதுபோன்ற உணர்ச்சியில்லாத காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை. அதனால், தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சிக்கவில்லை. உழைத்துப் பிழைப்போம் என்று சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.

இந்த வியாபாரத்தில் அன்றாட வயிற்றுப்பிழைப்பு ஓடுகிறது. 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்கு ஒரு நிரந்தரமான வருமானம் வரக்கூடிய தொழில் பார்க்க வேண்டும். கரோனா முடிந்தால் நடைபாதை கடையில் கிடைக்கும் ஒரளவு வருமானத்தை கொண்டு சொந்தமாக கடை வைக்கும் எண்ணம் இருக்கும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x