Published : 12 Sep 2020 02:26 PM
Last Updated : 12 Sep 2020 02:26 PM

உலகப் பறவைகள் வலசை வரும் மதுரையில் நீர்ப் பறவைகள் சரணாலயம் அமைகிறதா?- பறவைகள் விவரங்களை சேகரிக்கும் வனத்துறை

மதுரை

மதுரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவதால் நீர்ப் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தென் தமிழகத்தில் முக்கிய ஆன்மிக, சுற்றுலாத் தலமான மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றைத் தவிர பெரிய நீர் ஆதாரங்கள் இல்லை.

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றிலும் தண்ணீர் வரும்.

மற்ற காலங்கள் முழுவதும் வைகை ஆற்றுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராமல் வறண்டுபோய்தான் கிடக்கிறது. அதனால், மதுரை மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கண்மாய்களே பிரதான நீர் ஆதாரமாகத் திகழ்கின்றன.

மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் உள்ளூர் பறவைகள் முதல் உலக பறவைகள் வரை வந்து செல்கின்றன.

இதில், சாமநத்தம், கரிசல்குளம், சோழவந்தான், வடகரை, பெரிய கண்மாய் போன்றவற்றில் ஆண்டு முழுவதுமே பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன.

பறவைகள் வலசை இந்த மாதம் இறுதியில்தான் தொடங்கும். ஆனால், அதற்கு முன்பாகவே இந்தக் கண்மாய்களில் ஃபிளம்பிங்கோ (பூ நாரைகள்) என்ற அபூர்வ வகை பறவை இனங்கள் வர ஆரம்பித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

இதே போல் பெயிண்டர்ஸ் ஸ்டோக் எனப்படும் வெளிநாட்டு வர்ண நாரை பறவைகளும், பெலிக்கன்ஸ் எனப்படும் கூழைக்கடா பறவைகள் போன்றவை இங்கு வந்து தங்கியுள்ளன.

இம்மாத இறுதியில் இன்னும் அதிகமான பறவைகள் வலசை வர வாய்ப்புள்ளன. ஆனால், பறவைகளுக்கான பாதுகாப்பும், அதன் வாழ்விடங்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகளிலும் மதுரை மாவட்ட வனத்துறை அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அதனாலேயே, மதுரையில் பறவைகள் வாழ்விடமாகக் கொண்ட கண்மாய்களில் ஒன்றை கூட இன்னும் வனத்துறை பறவைகள் சரணாலயமாக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘மதுரையில் நீர் வரத்தை பொறுத்துதான் பறவைகள் வாழ்விடமும், அதன் வருகையும் இருக்கும்.

அவனியாபுரம், சாமநத்தம், வெள்ளக்கல் கண்மாய்களில் நிரந்தரமாகவே பறவைகள் இருக்கும். மழைக்காலம் முடிந்ததும், கூத்தியார் கூண்டு, சோழவந்தான் வடகரை மற்றும் தென்கரை கண்மாய்கள், குன்னத்தூர், வண்டியூர், அழகர் கோயில் பூண்டி ஏரி கண்ணாய்களில் பறவைகள் வரும். கடந்த 3 ஆண்டாக நிரந்தரமாகவே சாமநத்தம், கரிசல் குளம் கண்மாய்களில் பிளமிங்கோ, பெயிண்டர்ஸ் ஸ்டோக், சங்கு வலை நாரை, சாம்பல் நாரை, பழுப்பு நாரை போன்றவை கூடு கட்டி குஞ்சுகள் பொறிக்கின்றன.

அதனால், மதுரை மாவட்டத்தில் நீர்ப் பறவைகள் சரணலாயம் அமைத்தால் இன்னும் பறவைகள் வருகை சிறப்பாக இருக்கும். சரணாலயம் அமைக்க, பொதுவாக நீர் பிடிப்பு அதிகமாக உள்ள கண்ணாய்கள் அனைத்திலும் நடுவில் தீவு போன்ற அமைப்புகள் உருவாக்க வேண்டும். அதில் நாட்டு கருவேலம், நீர் வேலம், வெள் வேலம் மரங்கள் வைத்தாலே பறவைகள் அதில் வந்து கூடு கட்ட ஆரம்பித்துவிடும். சாமநத்தம் கண்மாயில் இயல்பாகவே கண்மாய்க்கு நடுவில் தீவு போன்ற அமைப்பு காணப்பட்டு அதில் மரங்கள் உள்ளன. அந்த மரங்களில்தான் பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன. பறவைகள் அதிகமாக வசித்தால் அதன் எச்சம், விவசாய நிலங்களுக்கு சிறப்பான உரமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட வன அலுவலர் ஆனந்திடம் கேட்டபோது, ‘‘மாவட்டத்தில் என்னென்ன பறவைகள் உள்ளன, அவை எங்கெங்கு வந்து செல்கின்றன விவரங்களே போதுமான அளவு இல்லை. அந்த விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது பறவைகளை பாதுகாக்கும் பணிகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். அதன்பிறகே பறவைகள் சரணாலயம் அமைப்பதை பற்றி யோசிப்போம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x