Published : 12 Sep 2020 02:21 PM
Last Updated : 12 Sep 2020 02:21 PM
இளைய தலைமுறையை அழித்தொழித்து வரும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 12) வெளியிட்ட அறிக்கை:
"நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் அழுத்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அரியலூர் மாணவர் விக்னேஷ் உடலை எரித்துக் கொண்டிருந்த நெருப்பு அணையும் முன்பு ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலை செய்தி தாங்க முடியாத வேதனையாகும். இந்த துயர முடிவுக்கு மத்திய அரசின் நீட் தேர்வே காரணம் என கடிதம் எழுதி வைத்திருப்பதுடன், குரல் பதிவு செய்து மரண வாக்குமூலமாக ஜோதிஸ்ரீ துர்கா விட்டுச் சென்றுள்ளார்.
கல்வி நிலையில் முன்னேறியுள்ள தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளும் தீய நோக்கத்துடன் நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, பலவந்தமாக அமலாக்கி வருகிறது.
அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, ஜோதிஸ்ரீ துர்கா வரையிலும் 15-க்கும் மேற்பட்ட அறிவுக் கூர்மையுள்ள, பல்திறன் ஆற்றலுள்ள வளர்பருவக் குழந்தைகளை தமிழகம் பலி கொடுத்து வருவதை தடுக்க இயலாதா?. வெறும் கை பிசைந்து நின்று கண்ணீர் வடிப்பது தீர்வாகுமா? அனைவரும் அணிதிரண்டுதான் தீர்வு காண வேண்டும்.
நீட் தேர்வில் விலக்குப் பெறுவதாக உறுதியளித்து வந்த மாநில அரசும், பிடிவாதமாக நீட் தேர்வை திணித்து வரும் மத்திய அரசும் தான், இந்தத் தொடர் மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது.
இளைய தலைமுறையை அழித்தொழித்து வரும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தவும், நீட் தேர்வை தவிர்த்து, பழைய முறைப்படி . பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT