Published : 12 Sep 2020 02:18 PM
Last Updated : 12 Sep 2020 02:18 PM
செப்டம்பர் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மீதான தமிழக அரசின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வது குறித்துச் சட்டப்பேரவையில் வலியுறுத்த வேண்டும் என நாகை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் இன்று நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த 2019 ஜனவரியில் தமிழகத்தில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குக் குற்றக் குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்வரும் கூட்டத் தொடரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்று அவர்களை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முறையீடு வழங்குவது என்ற மாநில ஜாக்டோ - ஜியோ முடிவின்படி இன்று, நாகை மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி) ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அளித்தார்கள்.
நாகப்பட்டினம், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி அலுவலகங்களிலும் மனுக்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் அ.தி.அன்பழகன், பா.இரவி, வெ.சரவணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.காந்தி, ப.அந்துவன் சேரல், பா.ராணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரிய விளக்கமளித்து மனு அளித்தனர்.
மனுவில், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிடுதல், புதிய தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT