Published : 12 Sep 2020 02:04 PM
Last Updated : 12 Sep 2020 02:04 PM
மதுரையில் மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைவதற்குத் தேவையான ஆவணங்களை மாநில அரசு துரிதமாக வழங்க வேண்டும் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றத. மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், பார்வையாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாவட்ட பொதுச் செயலர்கள் பாலகுமார், பாலமுருகன், செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.கே.ஹரிகரன், கராத்தேராஜா, மாவட்ட செயலர் செண்பகபாண்டி, மகளிரணி தலைவர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்க எடுக்க வேண்டும், மதுரையில் பல்வேறு இடங்களில் குடிநீரில் சாக்கடை கலக்கிறது, சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
பாதாள சாக்கடை உடைந்து தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது, ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டாமல் பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, புகையிலை அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இவற்றை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகர் எல்லை காவல் நிலையங்களில் பாஜக, அதன் சார்பு அமைப்புகள் சார்பில் கொடுக்கப்படும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில்லை.
பாஜக புகார் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை மாவட்டத்தில் மத்திய விவசாய திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைய, மாநில அரசு தேவையான ஆவணங்களை சமர்பித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT