Published : 25 Sep 2015 05:46 PM
Last Updated : 25 Sep 2015 05:46 PM
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நகரப் பகுதியில் வசிக்கும் நலிந்த மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த “புதுமையான முன்மாதிரி திட்டத்தை” அறிமுகம் செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த திட்டங்களில் ஒன்றான ‘நவீன சலவையகம்’ என்ற திட்டத்தை திருவண்ணாமலை நகராட்சி தேர்வு செய்தது. அதற்கான திட்ட மதிப்பீடு, செயல்படுத்தும் முறை, பயன்பெறும் சலவை தொழிலாளர் எண்ணிக்கை ஆகியவற்றை என்ஜிஓ மூலம் நகராட்சி நிர்வாகம் தயாரித்தது. அதன்படி, ரூ.1 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரானது. தந்தை பெரியார் நகர் அல்லது தாமரை குளத்தில் திட்டத்தை செயல்படுத்துவது என்று இறுதி செய்யப்பட்டது.
நவீன சலவையக இயந்திரத்தில் இரண்டரை மணி நேரத்தில் 400 கிலோ துணிகளை துவைக்கலாம். வெள்ளை மற்றும் வண்ண ஆடைகளுக்கு என்று தனித்தனியாக இரண்டு வகை இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. துவைத்தல், பிழிதல், உலர வைத்தல் மற்றும் அயன் செய்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் இயந்திரங்களே மேற்கொள்ளும். இதில் முக்கியமானதாகக் கூறப்படுவது தண்ணீர் செலவினம் மற்றும் மனித உழைப்பும் 80 சதவீதம் குறைவு என்பதுதான். எரிவாயு மூலம் இயந்திரத்தை இயக்குவதால் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. மழை காலத்தில் தடை இல்லாமல் துவைக்கலாம்.
இத்தகைய திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது குறித்து சலவைத் தொழிலாளர்கள் நலக்குழு பொதுச் செயலாளர் த.ம.பிரகாஷ் கூறும்போது, “சலவைத் தொழிலுக்கு இயந்திர வசதி கிடையாது. ரசாயன பவுடர்களை பயன்படுத்தி துணி துவைப்பதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். நவீன சலவைத் துறை அமைத்து கொடுங்கள் என்று 4 ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். ஆட்சியர், அமைச்சர்கள் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
200 குடும்பங்கள் ஏமாற்றம்
இந்த நிலையில், திருவண்ணாமலையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நவீன சலவையகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி களுக்கு திட்ட அறிக்கையை அனுப்பியதால், திட்டம் கைவிடப் பட்டது என்பதை ஏற்க முடியாது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் 200 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன் பெற்றிருக்கும். நவீன சலவையக திட்டத்தை மத்திய அரசு கைவிட்டாலும், தமிழக அரசு செயல்படுத்தலாம். ரூ.50 கோடி நிதி ஒதுக்கி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவீன சலவையகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ”என்றார்.
பதில் வரவில்லை
இது குறித்து நகராட்சி ஆணையர் சுல்தானாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “நவீன சலவையகம் குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்று பதில் கடிதம் ஏதும் வரவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT