Published : 12 Sep 2020 11:59 AM
Last Updated : 12 Sep 2020 11:59 AM

கரோனா காலத்தில் 1,31,352 புற்றுநோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்று காலத்திலும் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் சிறப்பான முறையில் நடைபெறுவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப். 12) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், கரோனா தொற்று காலத்திலும் தமிழ்நாடு அரசு கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா தொற்று காலத்திலும் புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 352 நபர்கள் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 48 ஆயிரத்து 647 நபர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் 2,191 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 27 ஆயிரத்து 721 நபர்களுக்கு கீமோதெரபியும், 11 ஆயிரத்து 678 நபர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. 6,664 நபர்களுக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் புற்றுநோயாளிகள் சிகிச்சையை இடைவிடாமல் தொடர்வதற்காக தமிழ்நாடு அரசின் 102 வாகன சேவை மூலம் புற்றுநோயாளிகளின் வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் அவர்களின் வீடுகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டனர். இவ்வாகன சேவையின் மூலம் மார்ச் 2020 முதல் இதுவரை 1,396 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

கரோனா தொற்று காலத்திலும் அரசு மருத்துவமனைகள் கூடுதல் பளுவினையும் திறம்பட எதிர்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் உயரிய சேவைகள் வழங்கி விலைமதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் பல்வேறு தரப்பினர்களின் தொடர் பாராட்டுக்களை பெற்று வருகின்றன"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x