

மதுரையில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 11) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"மதுரையில் மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனைக்குரியது வருந்தத்தக்கது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் தோல்வி பயத்தால் ஒரிரு நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட வடு ஆறுவதற்கு முன் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரியது. மாணவ, மாணவியின் பெற்றோர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை (செப். 13) தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகாமல் பயத்தை விடுத்து தைரியத்துடன் தேர்வு எழுதுங்கள்; உங்கள் லட்சியம், கனவுகள் நிறைவேறும்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.