Published : 12 Sep 2020 08:18 AM
Last Updated : 12 Sep 2020 08:18 AM
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் 6 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இமானுவேல் சேகரன் 63-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாயத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், இமானுவேல் சேகரனின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு 18 வயதில் கைதாகி நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர் இமானுவேல் சேகரன். தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கல்வி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர். 2010-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்த காலகட்டத்தில் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. சமூகநீதிக் களத்திலும் நாட்டின் விடுதலைக் களத்திலும் நாடிச் சென்று பெரும்பங்காற்றிய அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும், அந்த உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாளாகவே அமைந்துள்ளது.
6 உட்பிரிவுகள்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 6 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, 'தேவேந்திரகுல வேளாளர்' என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை உரிய முறையில் பரிசீலனை செய்து அதற்கு உரிய தீர்வு காண தேசிய பட்டியலினத்தோர் ஆணையமும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT